தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 மசோதாக்கள் நிறைவேறுமா என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும். ஆனால் மசோதாவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகளுக்கு 180 வாக்குகளே போதுமானதாக இருப்பதால் நிறைவேறமா என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.
இந்திய அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தொகுதி மறுவரையறை மசோதா உட்பட மூன்று முக்கிய மசோதாக்கள் குறித்த விவாதம் இன்று தீர்மான கட்டத்தை எட்டியுள்ளது. ஒன்றிய அரசு நேற்று மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவையும், தொகுதி மறுவரையறை மசோதாவையும் உள்ளிட்ட பல்வேறு சட்ட முன்வரைவுகளை மக்களவையில் தாக்கல் செய்தது.

இந்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. குறிப்பாக தொகுதி மறுவரையறை தொடர்பான முன்மொழிவு அரசியல் சமநிலையை பாதிக்கக்கூடும் என்ற கருத்தை முன்வைத்து, விவாதத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று இரண்டாவது நாளாகவும் இந்த மசோதாக்கள் குறித்து விவாதம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். விவாதம் நிறைவடைந்ததும், மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களவையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து 293 எம்.பி.க்கள் உள்ள நிலையில், இந்த மசோதாக்களை நிறைவேற்றும் திறன் குறித்து அரசியல் வட்டாரங்களில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனினும், அரசியலமைப்பு திருத்த மசோதாவாக இருப்பதால், மொத்த உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு அவசியமாகிறது. இதனால், மத்திய அரசுக்கு கூடுதலாக சுமார் 70 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது.
மறுபுறம், இந்த மசோதாக்களைத் தடுக்க எதிர்க்கட்சிகளுக்கு 180 வாக்குகள் போதுமானதாகும். தற்போது இந்தியா கூட்டணி சார்பில் 234 உறுப்பினர்கள் இருப்பதால், மசோதாக்களின் நிலை குறித்து உறுதி கூற முடியாத நிலை நிலவுகிறது.
இதனால், இன்றைய விவாதமும் அதன் பின் நடைபெறவுள்ள வாக்கெடுப்பும் இந்த மசோதாக்கள் நிறைவேறுமா அல்லது எதிர்க்கட்சிகள் தடைசெய்யுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை ஒன்றிய அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும் – முதல்வர்
