தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து, விசிகவின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் விவாதித்து, கட்சியின் நிலைப்பாடு குறித்து, திருமாவளவன் இன்று மாலை 5 மணிக்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பான அரசியல் பரபரப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக வெற்றிக் கழகத்திற்கு இன்னும் 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், மாநில அரசியல் வட்டாரங்களில் பல்வேறு யூகங்கள் மற்றும் ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ளன.

காங்கிரஸ் மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு தற்போது முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது முடிவை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியானது. மேலும், தவெக தலைவர் விஜய் நேரில் சென்று திருமாவளவனை சந்திக்க உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவியது. இந்த நிலையில், இன்று காலை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட விசிகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு திடீரென தள்ளிப்போனது. இதையடுத்து, இன்று மாலை 4 மணிக்கு திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மூத்த நிர்வாகிகள், “தவெக ஆதரவு விவகாரம் தொடர்பாக நேற்று மாலை கட்சியின் உயர்நிலைக் கூட்டம் இணையவழியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை இன்று மாலை கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவிப்பார்” என்று தெரிவித்தனர். முன்னதாக இன்று காலை 10 மணிக்கே விசிக தனது முடிவை அறிவிக்கும் என தகவல் வெளியான நிலையில், தற்போது அறிவிப்பு மாலை வரை தள்ளிப்போனது அரசியல் வட்டாரங்களில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆட்சியை அமைப்பது யார் என்ற கேள்வி தீவிரமடைந்துள்ள நிலையில், விசிக எடுக்கும் முடிவே அரசியல் சமநிலையை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
