விசிகவை சிறுமைப்படுத்தும் முயற்சிக்கு துணைபோக வேண்டுாம் என ஊடகங்களுக்கு விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
தமிழகத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாகத் தவெக ஆதரவு கோரியுள்ள நிலையில், விசிக சார்பில் பதவிகள் கேட்கப்படுவதாகப் பரவும் செய்திகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மறுத்துள்ளது.
தமிழகத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பான அரசியல் பரபரப்பு நீடித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு கோரியிருக்கும் சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பதவிகள் கேட்கப்படுவதாக வெளியான தகவல்களை அக்கட்சி மறுத்துள்ளது. இதுகுறித்து விசிக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் தனது வலைதள பதிவில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “விசிக சார்பில் பல்வேறு பதவிகள் கேட்கப்படுவதாகவும், குறிப்பிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதாகவும் பரவி வரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இத்தகைய தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், வதந்திகளை பரப்பி விசிகவை சிறுமைப்படுத்தும் முயற்சிகளுக்கு ஊடகங்கள் துணை போக வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவை பெற தவெக முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள விசிகவின் ஆதரவு குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக, தவெகவுக்கு ஆதரவு வழங்கும் முன் துணை முதலமைச்சர் பதவி உள்ளிட்ட முக்கிய பதவிகள் கோரப்பட்டதாக சில தகவல்கள் வெளியாகின.
ஆனால் அந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவை அனைத்தும் ஆதாரமற்றவை என ரவிக்குமார் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், ஆட்சி அமைப்பது தொடர்பான கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை விசிக தலைவர் தொல். திருமாவளவன் அறிவிப்பார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தவெகவுக்கு தனிப்பெரும் பெரும்பான்மை இல்லாத சூழலில், எதிர்க்கட்சிகளின் ஆதரவு அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், விசிக தரப்பின் இந்த விளக்கம் அரசியல் அரங்கில் கவனம் ஈர்த்துள்ளது.
தவெகவுக்கு ஆதராவா? இன்று மாலை முடிவை அறிவிக்கிறார் திருமாவளவன்…
