சட்டவிரோத ஊடுருவரை தடுக்க இந்திய – வங்கதேச எல்லையில் இன்றிலிருந்து அடுத்த 45 நாள்களுக்குள் வேலி அமைக்கப்படும் என மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளாா்.
2026 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக சார்பில் முதலமைச்சராக பதவியேற்றுள்ள சுவேந்து அதிகாரி, பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளார். நிர்வாக மாற்றம், சட்டவிரோத ஊடுருவல் தடுப்பு மற்றும் நிலுவை திட்டங்களை விரைவுபடுத்தும் வகையில் அவரது முதல் கட்ட நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
அதில் முக்கியமாக, இந்தியா – வங்கதேச எல்லைப் பகுதியில் சட்டவிரோத ஊடுருவலை தடுக்க அடுத்த 45 நாட்களுக்குள் மீதமுள்ள எல்லைப் பகுதிகளில் வேலி அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தின் போது பாஜக அளித்த முக்கிய வாக்குறுதிகளில் இதுவும் ஒன்றாக இருந்தது. இந்தியா – வங்கதேச எல்லையின் மொத்த நீளம் 4,097 கிலோமீட்டர் ஆகும். இதில் ஏற்கனவே 3,240 கிலோமீட்டர் வரை வேலி அமைக்கப்பட்டுள்ளதாகவும், நில பிரச்னைகள் காரணமாக மீதமுள்ள சுமார் 850 கிலோமீட்டர் பகுதி மட்டும் இன்னும் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன், மாநிலம் முழுவதும் 45-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். புதிய அரசு தனது நிர்வாக அணியை விரைவாக அமைக்கும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. மேலும், மத்திய அரசு நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை உடனடியாகத் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை நிலுவையில் இருந்த இந்தப் பணிகளை முன்னெடுக்க புதிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்த எல்லைப் பாதுகாப்புப் படையான பிஎஸ்எஃப்-க்கு தேவையான நிலங்கள் அனைத்தும் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் சுவேந்து அதிகாரி உறுதியளித்துள்ளார். இதன் மூலம் எல்லை பாதுகாப்பு பணிகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் வன்முறைகளில் உயிரிழந்த பாஜக தொண்டர்களின் குடும்பங்கள் விரும்பினால், அந்த சம்பவங்கள் தொடர்பாக சிறப்பு விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு அனுப்பியிருந்தும், முந்தைய அரசால் நிலுவையில் வைக்கப்பட்டிருந்த கடிதங்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பதவியேற்ற உடனேயே சுவேந்து அதிகாரி மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைகள், மேற்கு வங்கத்தில் ஆட்சிமாற்றத்திற்கு பிறகு நிர்வாகத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
