சென்னையைச் சேர்ந்த பின்னணிப் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான கொடுமைகள் மற்றும் அத்துமீறல்களுக்கு எதிராகப் பகிரங்கமாகப் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
பிரபல பின்னணிப் பாடகி ஸ்வாகதா, தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்கள் குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது பேசுபொருளாகியுள்ளது. அதில், ஒரு பிரபல இசையமைப்பாளரால் தான் சந்தித்த பாலியல் ரீதியான கொடுமைகள் மற்றும் அதனால் ஏற்பட்ட மனக்காயங்கள் குறித்து அவர் வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இதற்காக நான் பல ஆண்டுகள் அமைதியாகவும், பொறுமையாகவும் காத்திருந்தேன். என்னைத் தேற்றிக்கொள்ளவும், இந்த காயங்களிலிருந்து குணமடையவும் நான் நீண்ட காலம் எடுத்துக் கொண்டேன். இப்போது என் இதயத்தின் ஆழத்தில் ஒரு தைரியத்தை உணர்கிறேன். தேவி எனக்கு அந்த வலிமையைத் தந்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் ஒருவரால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாக, ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவையே வெறுத்து தான் ஒதுங்கியிருந்ததாக அவர் அந்தப் பதிவில் ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகப் போராடத் துணிந்துவிட்டதாகக் கூறியுள்ள அவர், இதை ஒரு “மகிஷாசுரமர்த்தினி” அவதாரமாக, அதாவது தீமையை அழிக்கும் தர்ம யுத்தமாகப் பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
“மகிஷாசுரமர்த்தினியாக மாறி தர்ம யுத்தத்தைத் தொடங்கப்போகிறேன். அவளது ஆட்டம் ஆக்ரோஷமாகவும், கற்பனை செய்ய முடியாத அளவிற்கு பிரம்மாண்டமாகவும் இருக்கும்” என்று அவர் பதிவிட்டுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஸ்வாகதாவின் இந்த துணிச்சலான முடிவுக்கு அவரது ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளவாசிகள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
நாடகம் முதல் சினிமா வரை முத்திரை பதித்த கலைஞர் திலீப் ராஜ் காலமானார்
