இயக்குநர் மாரி செல்வராஜ், இசைஞானி இளையராஜாவுடன் முதன்முறையாக கைகோர்த்து இயக்கித் தயாரிக்கும் புதிய படத்திற்கு “மஞ்சணத்தி“ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள மாரி செல்வராஜின் ஆறாவது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘மஞ்சணத்தி’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் மூலம் இசைஞானி இளையராஜாவுடன் மாரி செல்வராஜ் முதன்முறையாக இணைந்து பணியாற்றுகிறார்.

‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ், தொடர்ந்து ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன்’ உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார். சமூக அக்கறை கொண்ட கதைகள் மற்றும் தனித்துவமான கதை சொல்லும் பாணியால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், தற்போது தனது ஆறாவது படைப்பை அறிவித்துள்ளார்.
‘மஞ்சணத்தி’ திரைப்படத்தை நவ்வி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் தலைப்பு போஸ்டர் மற்றும் அறிமுக வீடியோவுடன் படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் இசைஞானி இளையராஜா இணைந்து படத்தின் இசை மற்றும் படைப்புத் திசைகள் குறித்து கலந்துரையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மாரி செல்வராஜின் திரைப்படங்கள் பெரும்பாலும் சமூக அரசியல் சார்ந்த கருத்துக்களையும் மனித உணர்வுகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள நிலையில், ‘மஞ்சணத்தி’ திரைப்படமும் அதேபோன்று ஆழமான கதைக்களத்துடன் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜ் – இளையராஜா கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பதால், ‘மஞ்சணத்தி’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் தற்போது அதிகரித்துள்ளது.
நடிகர் அஜித் குமாரின் தாயார் மறைவுக்கு திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் அஞ்சலி
