முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை முதல் 2 நாட்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாநாடு: சென்னை தலைமைச் செயலகத்தில் தீவிர ஆலோசனை!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு நாளையும், நாளையும் மறுநாளும் (ஜூன் 29 மற்றும் 30) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.
புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் இந்த முதலாவது உயர்மட்ட மாநாட்டில், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
ஜூன் 29 (நாளை): மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி-க்களுடன் ஆலோசனை:
மாநாட்டின் முதல் நாளான நாளை (திங்கட்கிழமை) காலை, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் (SP) மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் விரிவான ஆலோசனை மேற்கொள்கிறார்.

இதில் முக்கியமாகப் பின்வரும் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது:
மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் மற்றும் பொது அமைதி.
பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு.
சுகாதாரம் மற்றும் ‘போதையில்லா தமிழ்நாடு’ திட்டத்தை தீவிரப்படுத்துதல்.
பழங்குடியினர், பட்டியலினத்தவர்கள் நலன் மற்றும் அவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல்.
சட்டவிரோத கனிமவளக் கொள்ளையைக் கட்டுப்படுத்துதல்.
அனைத்து மத வழிபாட்டு நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் நலன்கள்.
’வெற்றித் தமிழகம்’ தொலைநோக்குத் திட்டம்:
இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்களுடன் மட்டும் முதலமைச்சர் விஜய் தனியாக ஆலோசனை நடத்துகிறார். இதில், தமிழக அரசின் 28 முக்கியத் துறைகளில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும், புதிய அரசின் ‘வெற்றித் தமிழகம்’ தொலைநோக்கு ஆவணத்தின் (Vision Document) அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
ஜூன் 30 (இரண்டாம் நாள்): வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல்:
மாநாட்டின் இரண்டாம் நாளான ஜூன் 30-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை), சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை (IFS) சார்ந்த திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.
பசுமை தமிழ்நாடு திட்டம்.
வனப்பகுதிகளில் சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளுதல்.
வன உரிமைச் சட்டத்தை முறையாக அமல்படுத்துதல்.
பொதுமக்களுக்குப் பெரும் சவாலாக உள்ள மனித-வனவிலங்கு மோதல்களைத் தடுத்தல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இந்த அமர்வில் விவாதிக்கப்படவுள்ளது.
தலைமைச் செயலாளர் தலைமையில் இன்று முன்கூட்டிய ஆய்வு:
இந்த மாநாட்டிற்கு முன்னோட்டமாக, இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய் குமார் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் கலந்துகொண்ட முன்கூட்டிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய மாவட்ட வாரியான திட்ட அறிக்கைகள் மற்றும் தரவுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
