“ஆட்சியே வேஸ்ட்… இரவெல்லாம் தூக்கமில்லை!” – மணலியில் 10 நாட்களாகத் தொடரும் மின்வெட்டு: ஆத்திரத்தில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!


சென்னை மணலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 10 நாட்களாகக் கடுமையான மின்வெட்டு நிலவி வருவதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நள்ளிரவில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்கதையாகும் மின்வெட்டுத் துயரம்
சென்னை மணலி, சின்ன மாத்தூர், பெரிய மாத்தூர், சின்னசேக்காடு, பெரியசேக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே பகல் நேரங்களில் 1 முதல் 2 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில், கடந்த 10 நாட்களாக இரவு நேரங்களிலும் விடிய விடிய மின்தடை ஏற்படுவதும், லோ-வோல்டேஜ் (Low Voltage) பிரச்சினை காரணமாக மூன்று பேஸ் (Three Phase) மின்சாரத்தில் ஒரு பேஸ் மட்டும் துண்டிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால், இரவு நேரங்களில் மின்விசிறி கூட ஓடாமல் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
”மாற்றம்னு சொன்னாங்க.. இதுதான் மாற்றமா?” – மக்கள் கொந்தளிப்பு
பகலெல்லாம் வேலைக்குச் சென்றுவிட்டு இரவு நிம்மதியாக உறங்க முடியாமல் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தவித்து வருகின்றனர். குறிப்பாகக் குழந்தைகளை வைத்துக் கொண்டு நள்ளிரவில் தூங்க முடியாமல் தவிக்கும் தாய்மார்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் பேசுகையில்:
”ஆட்சியே வேஸ்ட், தண்டக் கருமம்! மாற்றம் மாற்றம்னு சொன்னாங்க.. நல்லா இருக்குதுங்க மாற்றம்! இரவெல்லாம் தூக்கமில்லாம முழிச்சுக்கிட்டே இருக்கோம். யாருக்காக இந்த ஆட்சி?” என்று தங்களது ஆத்திரத்தையும் வேதனையையும் கொட்டினர்.
பூட்டியிருந்த அலுவலகம் – சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்ட போன்கள்
பொறுமை இழந்த மணலி பகுதி பொதுமக்கள், நள்ளிரவில் மணலி காமராஜர் சாலையில் உள்ள மின்வாரிய உதவிப் பொறியாளர் அலுவலகத்தை அதிரடியாக முற்றுகையிட்டனர். ஆனால், நள்ளிரவு நேரத்தில் அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததுடன், அங்கு ஒரு மின் ஊழியர் கூட இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், மின்வாரிய உதவிப் பொறியாளரைத் (AE) தொடர்பு கொள்ள முயன்றபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அவசர உதவி எண்களும் வேலை செய்யாததால், யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் தவித்த பொதுமக்கள், நள்ளிரவில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் சமரசம் – விடியற்காலையில் வந்த மின்சாரம்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணலி காவல்துறையினர், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மின்வாரிய ஊழியர்கள் யாரும் இல்லாததால், “காலையில் மின்வாரிய பொறியாளரை நேரில் அழைத்து உரிய விளக்கம் கேட்கலாம்” என்று போலீசார் உறுதியளித்தனர்.
போலீசாரின் சமரசத்தை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து, விடியற்காலை 3 மணி அளவிலேயே அப்பகுதிக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது. 10 நாட்களாகத் தொடரும் இந்த மின்வெட்டுப் பிரச்சினைக்கு மின்வாரிய உயர் அதிகாரிகள் உடனடியாக நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என மணலி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
