“ரோமாபுரி எரியும்போது நீரோ மன்னன் ஃபிடில் வாசித்தான்” என்ற வரலாற்றுப் பழமொழி இன்று தமிழக அரசியலில், ரத்தமும் சதையுமாக அச்சுப்பிசகாமல் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. அதிமுக என்ற மாபெரும் ஜனநாயகப் பேரியக்கம், நாலாபுறமும் சரிவை நோக்கி நகர்ந்து, தொண்டர்களும் முக்கிய நிர்வாகிகளும் கொத்துக் கொத்தாக வெளியேறிக் கொண்டிருக்கும் வேளையில், எடப்பாடி பழனிசாமி எதைப்பற்றியும் கவலையின்றி, அரசியல் ‘ஃபிடில்’ வாசித்துக் கொண்டிருக்கிறார். அதிமுக வரலாற்றில், இப்படியொரு அலட்சியமான, சுயநலப் போக்குகொண்ட ஒரு தலைமைத்துவத்தை தமிழகம் இதற்கு முன்பு எப்போதுமே கண்டதில்லை!


தனிநபர் சொத்தா?
பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளையும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் மக்கள் செல்வாக்கையும், புரட்சித்தலைவி அம்மாவின் இரும்புக்கர ஒழுக்கத்தையும் அடித்தளமாகக் கொண்டு உருவான இயக்கம் அதிமுக. ஆனால், இன்று இந்த இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி தனது சொந்த கார்ப்பரேட் நிறுவனமாக, தன் குடும்பச் சொத்தாக நினைத்து நடத்துகிறாரோ என்ற சந்தேகம் அடிமட்டத் தொண்டன் வரை எழுந்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகால அரசியல் நகர்வுகளை உற்றுநோக்கினால், இதில் ஒளிந்திருக்கும் அதிர்ச்சி உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்துவதற்காகப் பிறந்த ஒரு இயக்கம், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆளுங்கட்சியுடன் மறைமுக உடன்படிக்கையில் (Dealing) இருந்ததாக அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, மக்கள் மத்தியில் எழுச்சியை உண்டாக்குவதற்குப் பதிலாக, வெறும் கடமைக்காக, கேமராக்களுக்கு முன்னால் மட்டும் போட்டோஷூட் போராட்டங்களை நடத்திவிட்டு ஒதுங்கிக்கொள்கிறது தற்போதைய தலைமை. அதுமட்டுமன்றி, வாரிசு அரசியலை தீவிரமாக எதிர்த்த இயக்கத்தில், இன்று தனது மகன் மிதுன் பழனிசாமியை கட்சிக்குள் பின்வாசல் வழியாகக் கொண்டுவந்து, முக்கியப் பொறுப்புகளை வழங்க எடப்பாடி எடுக்கும் முயற்சிகள் தொண்டர்களைக் கொதிப்படையச் செய்துள்ளன.
தலைவர்கள் காட்டிய வழி என்ன?
அதிமுகவின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால், அதன் நிறுவனத் தலைவர்களின் பெருந்தன்மையும், ராஜதந்திரமும் புரியும். 1980களில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடன் கருத்து வேறுபாடு கொண்டு விலகிய ஆர்.எம்.வீரப்பன், எஸ்.டி.சோமசுந்தரம் போன்ற மூத்த தலைவர்களை, கட்சியின் நலன் கருதி எம்.ஜி.ஆர் மீண்டும் அரவணைத்து முக்கியப் பொறுப்புகளை வழங்கினார்.
அதேபோல், புரட்சித்தலைவி அம்மாவின் காலத்திலும், சுல்தான் அமீர் ஜான், காளிமுத்து, திருநாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், எம். தம்பிதுரை, பி.வி. ரமணா, செங்கோட்டையன், இந்த எடப்பாடி பழனிசாமி என தற்காலிகமாக விலக்கிய பலரையும், ஏன்… தன்னை கடுமையாக விமர்சித்தவர்களைக் கூட, கட்சியின் பலத்திற்காக மீண்டும் தாய்க் கழகத்திற்குள் கொண்டுவந்து, உரிய அங்கீகாரம் தந்து அழகு பார்த்தார் அம்மா.
மிக முக்கியமாக, எம்.ஜி.ஆரும், அம்மாவும் தங்களது வாழ்நாளில் அரசியல் எதிரியான திமுகவுடன் எள்ளளவும் சமரசம் செய்துகொண்டதே கிடையாது. ஆனால், இன்று அதே இயக்கத்தை திமுகவிடம் அடமானம் வைக்கும் நிலைக்குத் தள்ளியிருக்கும் எடப்பாடி பழனிசாமியை, உண்மையான ரத்தத்தின் ரத்தங்களான தொண்டர்கள் எப்படி ஏற்க முடியும்?
அதிகார மமதை
தவறுகளைத் தட்டிக்கேட்கும், கேள்வி எழுப்பும் உண்மையான விசுவாசிகள் இன்று கட்சியில் இருந்து ஓரம் கட்டப்படுகிறார்கள் அல்லது நீக்கப்படுகிறார்கள். இது அதிகார மமதையின் உச்சகட்ட வெளிப்பாடு. கே.பி. முனுசாமி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி போன்ற சில ஜால்ராக்களை மட்டுமே பக்கத்தில் வைத்துக்கொண்டு, அவர்களின் கைதட்டலில் மயங்கிக் கிடக்கும் எடப்பாடி பழனிசாமி, இவர்களோடு மட்டும் கட்சி நடத்திவிட முடியாது என்பதை உணர மறுக்கிறார்.
தன் சுயநலப் போக்கைப் பிடிக்காமல், கட்சியின் எதிர்காலம் கருதி வெளியேறுபவர்களை எல்லாம் துரோகிகள் என்று முத்திரை குத்துகிறார் இபிஎஸ். ஆனால், அவர் இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக அமர்ந்திருப்பதற்கும், ஏன்… அவர் ஒரு சட்டமன்ற உறுப்பினராகக் கூட ஆவதற்கும், இன்று அவர் துரோகிகள் என்று சொல்லும் இதே நிர்வாகிகளும் தொண்டர்களும்தான் உழைத்தார்கள் என்பதை அவர் மறப்பது நன்றிகெட்டத்தனம்!
சரிந்து விழும் கோட்டை
எடப்பாடியின் இந்த சர்வாதிகாரப் போக்கால், அதிமுகவின் நிரந்தர வாக்கு வங்கி என்றழைக்கப்படும் அசைக்க முடியாத கோட்டையில் இன்று மிகப்பெரிய ஓட்டை விழுந்துவிட்டது. அதன் நேரடி விளைவுதான் இன்றைய அதிரடி அரசியல் மாற்றங்கள். அதிமுகவின் வலுவான முகங்களாக இருந்த முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளைத் தூக்கியெறிந்துவிட்டு, 15,000 ஆதரவாளர்களுடன் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.
ஏற்கனவே பல அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக நோக்கிப் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கீழ்மட்ட அளவில் இந்த இணைப்பு வைபவம் ஒரு சுனாமியைப் போலத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மறுபுறம், சென்னை மண்டலத்தின் முக்கியத் தூணாக விளங்கிய முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் திமுகவில் இணைந்து அதிர்ச்சியளித்துள்ளார்.
ஆளுமை அழியாது
தமிழக அரசியல் களம் எத்தனை மாற்றங்களைச் சந்தித்தாலும், அதன் மையப்புள்ளியைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கிய புரட்சித்தலைவி அம்மா வளர்த்தெடுத்த கட்சியை, தன் சொந்தக் கரங்களாலேயே அழித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசியல் பாசறையில் பாடம் பயின்றவர்கள், இன்று எடப்பாடியின் சகிப்புத்தன்மையற்ற போக்கால் எந்தத் திசையில் பயணித்தாலும், எந்தக் கட்சியின் கொடியைப் பிடித்தாலும், அங்கே தங்களது தனித்துவமான ஆளுமையால் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள், கோலோச்சுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
பிரிந்து சென்றவர்களும், செல்பவர்களும் இந்த இயக்கத்தை ரத்தம் சிந்தி, வியர்வை சிந்தித் தூக்கி நிறுத்த உழைத்தவர்கள் தான் என்பதை எடப்பாடி பழனிசாமி போன்ற தற்காலிகத் தலைவர்கள் மறந்துவிடக் கூடாது!
