தமிழகத்தில் தவெக அரசுதான் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது என்றும், இந்த குதிரை பேர விவகாரத்தில் நம்பர் ஒன் குற்றவாளி முதலமைச்சர் விஜய் தான் என்றும் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பரந்தாமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

திமுக மீது வீண் பழி
நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, தனது ஆட்சியில் நடக்கும் அவலங்களை மூடி மறைப்பதற்காக திமுக மீது பழி சுமத்துகிறது. திமுக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக அமைச்சர் நிர்மல்குமார் வடிகட்டிய பொய்யைத் தெரிவித்து, ஒரு நாடகத்தை நடத்தி வருகிறார். இந்த மைனாரிட்ட அரசு சதி செய்வதாக திமுக மீது குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது. பிளாக் டிக்கெட் விற்றவர்கள் எல்லாம் இப்போது அமைச்சராக வந்துள்ளார்கள். அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்பு ஆதாரமில்லாமல் பேசக் கூடாது. அமைச்சர் நிர்மல் குமாரைப் பார்க்கும் போது, ‘அரண்மனை நாயை அடக்குடா வாயை’ என்ற கலைஞர் அவர்களின் வசனம் தான் ஞாபகத்திற்கு வருகிறது.

அதிமுக-வுடன் ரகசியப் பேரம்
அதிமுகவில் ஒரு அணியை மட்டும் சந்தித்த முதலமைச்சர் விஜய், ஏன் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கவில்லை? அது குதிரை பேரம் இல்லையா? பத்து அமைச்சரவைப் பதவிகள், வாரியங்களைத் தருகிறேன் என முதலமைச்சர் விஜய் வாக்குறுதி அளித்து அதிமுக குழுவிடம் பேசினார். ஆனால், இதில் சட்டச் சிக்கல் ஏற்பட்டுவிடும் என்ற ஒரே காரணத்திற்காக அவர் பின்வாங்கினார். தற்போது அதன் தொடர்ச்சியாகவே, ஒவ்வொருவராக ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர். இது ஜனநாயகத்தின் மீது திணிக்கப்படக்கூடிய தாக்குதலாகும். ஒட்டுமொத்தமாக, பாஜக வடிவமைத்துக் கொடுத்த ‘ப்ளே’-வைத்தான் (நாடகத்தை) விஜய் இப்போது அரங்கேற்றி வருகிறார்.
காவல்துறை அரசியல் & பாதுகாப்பு குளறுபடி
டிடிவி தினகரன் கொடுத்த புகார் மீது ஏன் இதுவரை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை? காவல்துறையைக் கையில் வைத்துக்கொண்டு அரசியல் அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழக வரலாற்றில் இதுவரை யாரும் இப்படிச் செய்ததில்லை. இது விஜய் சர்க்கார் அல்ல; குதிரை பேர சர்க்கார் என்பதைத்தான் இவர்களின் செயல்பாடுகள் காட்டுகின்றன.
மேலும், இஸட் பிளஸ் பாதுகாப்பில் உள்ள முதலமைச்சருக்குத் தனியாகப் பிரைவேட் செக்யூரிட்டி (தனியார் பாதுகாப்பு) வழங்கப்பட்டுள்ளது. அந்தத் தனியார் பாதுகாப்பைச் சேர்ந்த நபர் மாநிலத்தின் டிஜிபியையே இடித்துத் தள்ளிவிட்டுச் செல்கிறார். இது முதலமைச்சரின் பாதுகாப்பில் உள்ள மிகப்பெரிய குளறுபடியை அம்பலப்படுத்துகிறது.
நாங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்த விவகாரத்தை உயர் நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று சட்டரீதியாகச் சந்திப்போம். இவ்வாறு திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் தெரிவித்தார்.
