மதுரையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையரைத் நேரில் அழைத்து ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆய்வு நடத்தியிருப்பது அத்துமீறிய செயல் என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக அவர் நிர்வாகத்தில் மூக்கை நுழைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


மதுரையில் ஆளுநர் பேசியதும்… ஆய்வு நடத்தியதும்…!
திருப்பரங்குன்றம் பகுதியில் நடைபெற்ற ‘ஐஎன்ஏ (INA) வேர்களைத்தேடி’ என்ற குறும்படப் போட்டி பரிசளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “வைகை ஆற்றைப் பார்த்தேன், நீர் எங்கே? வைகையை யாரும் சீரமைக்காவிட்டால் ஆளுநர் மாளிகையே நேரடியாகக் களமிறங்கும்” என்று பேசினார்.
இதனைத் தொடர்ந்து, அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்த ஆளுநர் அர்லேகர், மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் ஆகியோரை நேரில் வரவழைத்து அதிரடி ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.
இந்த ஆய்வின் போது, மத்திய அரசின் திட்டங்கள், சட்டம்-ஒழுங்கு, நீர்நிலை பாதுகாப்பு, பெண்கள்-குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் ஆளுநர் விளக்கம் கேட்டதாக செய்திகள் வெளியாகி தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தின.
வைகோ விடுத்துள்ள கண்டன அறிக்கை:
ஆளுநரின் இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் ஆளுநர்: தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இருக்கும் அர்லேகர், மாநில அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளைத் தன்னிச்சையாக ஆய்வு நடத்தியிருப்பது முற்றிலும் அத்துமீறிய செயலாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆளுநருக்கு வழங்கியுள்ள அதிகார வரம்புகளை அவர் திட்டமிட்டு மீறியுள்ளார்.
மக்களாட்சிக்கு எதிரான இரட்டை ஆட்சி முறை:
மக்களால் வோட்டளித்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு இணையாகத் தானும் ஒரு அரசை நடத்த ஆளுநர் முயல்வது ஆரோக்கியமான ஜனநாயகம் ஆகாது. அரசு அதிகாரிகளை அழைத்து உத்தரவிடுவதும், வைகை ஆற்றைச் சீரமைக்க ஆளுநர் மாளிகையே களமிறங்கும் என்று பேசுவதும் ஆளுநரின் பொறுப்பற்ற தனத்தைக் காட்டுகிறது.
வைகோவின் நேரடி எச்சரிக்கை:
“தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்கிவிட்டு, சமாந்தர அரசு (Parallel Government) நடத்த ஆளுநர் அர்லேகர் முயல்கிறார். அரசியலமைப்புச் சட்டத்தின் வரையறைகளை மீறும் ஆளுநரின் போக்கை இனிமேலும் ஏற்றுக்கொள்ள முடியாது.”
இனியும் ஆளுநர் அர்லேகர் தனது வரம்பை மீறி, மக்கள் அரசின் நிர்வாகப் பணிகளில் தலையிடுவதைத் தொடர்ந்தால், தமிழ்நாட்டு மக்களைத் திரட்டி ஆளுநருக்கு எதிராகப் பிரம்மாண்டப் போராட்டங்களை மதிமுக முன்னெடுக்கும் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
