Homeசெய்திகள்தமிழ்நாடு“ஆணவம் அழிவிற்கு வழி!” - தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

“ஆணவம் அழிவிற்கு வழி!” – தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

-

- Advertisement -

அனிதா ராதாகிருஷ்ணன் - மு.க.ஸ்டாலின்
‘ஆணவம் அழிவிற்கு வழி’ என முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 20ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும் தற்போதைய திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்றிருந்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதுகுறித்து தவெக நிர்வாகிகள் அளித்த புகாரின்பேரில் ஆத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

we-r-hiring

இந்த வழக்கில் எப்போது வேண்டுமானாலும் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்படலாம் என தகவல் பரவி வந்த நிலையில், முன் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷணன் இன்று கைது செய்யப்பட்டார். ஆய்வுக்காக சென்ற இடத்தில் போலீஸார் அவரை கைது செய்த நிலையில், தனது காரில் காவல் நிலையம் வருவதாக அவர் கூறியதையும் ஏற்காமல் போலீஸ் வாகனத்திலேயே அழைத்துச் சென்றனர். திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் , தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்:

திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு கண்டனம் தெரிவித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு.

தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?

சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்!

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?

தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா?

அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது?

வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து – விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர்.

“ஆணவம் அழிவிற்கு வழி!”” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ