
சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகளின் வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகம் (MTC) சார்பில் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
41 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான ரயில் வழித்தடத்தில் இன்று மற்றும் வரும் ஜூலை 12 ஆகிய தேதிகளில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக, இந்த இரு தேதிகளிலும் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 03.30 மணி வரை சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும் 41 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்திருந்தது.
50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்களின் பயணம் பாதிக்கப்படாமல் இருக்க, மாநகர போக்குவரத்து கழகம் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, வழக்கமாக இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய வழித்தடங்கள்:
தற்சமயம் ராயபுரம் மற்றும் தீவுத்திடல் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து தாம்பரத்திற்கு இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல், சீரான கால இடைவெளியில் பேருந்துகள் இயக்கப்படுவதை உறுதி செய்ய போக்குவரத்து கழகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்காக முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, பேருந்துகளின் இயக்கத்தை அவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ள இந்த நேரத்தில், போக்குவரத்து கழகத்தின் இந்த கூடுதல் பேருந்து வசதி பயணிகளுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
