Homeசெய்திகள்இந்தியாஇயற்கை எரிவாயு (LNG) மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது ஒன்றிய அரசு!

இயற்கை எரிவாயு (LNG) மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது ஒன்றிய அரசு!

-

- Advertisement -

LNG
இயற்கை எரிவாயு (LNG) விநியோகக் கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கி  ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய கிழக்கில் (மேற்கு ஆசியா)   போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அங்கு நிலவி வந்த பதற்றம் தணிந்துள்ளது. இதனால் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விநியோகம் மற்றும் ஒதுக்கீடு மீது விதிக்கப்பட்டிருந்த அவசரகாலக் கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு முழுமையாக நீக்கியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த அதிரடி முடிவால் தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் வணிக நுகர்வோருக்கான எரிவாயு தட்டுப்பாடு நீங்கி, விநியோகம் மீண்டும் பழையபடி இயல்பு நிலைக்குத் திரும்பவுள்ளது.

we-r-hiring
கட்டுப்பாடு விதிக்கப்பட்டது ஏன்?

கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மத்திய கிழக்கில் ஏற்பட்ட தீவிர மோதல் காரணமாக, சர்வதேச அளவில் மிக முக்கியமான கடல் வழித்தடமான ‘ஹார்முஸ் ஜலசந்தி’ (Strait of Hormuz) வழியாக நடக்கும் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இதனால், இந்தியாவுக்கு வர வேண்டிய எல்என்ஜி (LNG) இறக்குமதி தடைபட்டதுடன், சில சர்வதேச நிறுவனங்கள் எரிவாயு விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தினர். இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, கடந்த மார்ச் 9-ஆம் தேதி அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் இயற்கை எரிவாயு விநியோக அவசரகாலக் கட்டுப்பாட்டு உத்தரவை ஒன்றிய அரசு பிறப்பித்தது.
இயற்கை எரிவாயு (LNG) மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது ஒன்றிய அரசு!

அவசர நிலை பிரகடனம் : 

அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவை ஒன்றிய அரசே முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் நேரடிப் பங்கீடு செய்தது. அதன்படி

  • வீடுகளுக்கான குழாய் வழி எரிவாயு (PNG), வாகனங்களுக்கான சிஎன்ஜி (CNG) மற்றும் எல்பிஜி (LPG) தயாரிப்புகளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இன்றி முழுமையாக வழங்கப்பட்டது.

  • உரம் தயாரிப்பு ஆலைகளுக்கு 70%-மும், இதர தொழிற்சாலைகளுக்கு 80%-மும் மட்டுமே எரிவாயு வழங்கப்பட்டது.

  • மின் உற்பத்தி நிலையங்கள், பெட்ரோகெமிக்கல் ஆலைகள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கான எரிவாயு விநியோகம் கணிசமாகக் குறைக்கப்பட்டது.

கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்: 

மத்திய கிழக்கில் தற்போது போர்நிறுத்தம் (Ceasefire) அமலுக்கு வந்துள்ளதோடு, இருதரப்பு பேச்சுவார்த்தைகளும் சுமுகமாகத் தொடர்ந்து வருகின்றன. இதனால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வணிகக் கப்பல் போக்குவரத்து மற்றும் எல்என்ஜி விநியோகம் முற்றிலும் சீராகியுள்ளது. இதன் அடிப்படையில் எல்என்ஜி மீதான கட்டுப்பாடுகளை நீக்கி ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிய மோதல் போக்கு தணிந்து, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கடல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளதால், மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட அவசரகால விநியோக ஒழுங்குமுறை சட்டத்தின் முக்கிய செயல்பாட்டு விதிகள் நீக்கப்படுகின்றன”  என்று தெரிவித்துள்ளது.
BPCL

இந்தியாவுக்கு நிம்மதி : 

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85%-க்கும் அதிகமாகவும், இயற்கை எரிவாயு (LNG) தேவையில் பாதியளவும் (50%) வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. இதில் இந்தியாவின் 65% எல்என்ஜி தேவையும், 40% கச்சா எண்ணெய் தேவையும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக, கத்தாரில் இருந்து வரும் பெரும்பாலான எல்என்ஜி கப்பல்கள் இந்த வழித்தடத்தையே நம்பியுள்ளன.

தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால், வணிக ஒப்பந்தங்களின்படி எரிவாயு ஆலைகள், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் உரம் தயாரிப்பு நிறுவனங்களுக்குத் தடையின்றி முழு அளவில் எல்என்ஜி விநியோகம் செய்யப்படும். இதன்மூலம் தொழிற்சாலைகள் மற்றும் நுகர்வோருக்கான நெருக்கடி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ