பாஜகவைச் சேர்ந்த குண்டர்கள் தனது அலுவலகத்தின் மீது அத்துமீறித் தாக்குதல் நடத்துவதாகவும், ஆனால் அங்கு பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவல்துறையினர் அதனைத் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்ப்பதாகவும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான (எம்.பி) மஹுவா மொய்த்ரா குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்றை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கல்வீச்சுத் தாக்குதல்

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கியக் குரலாகவும், மத்திய பாஜக அரசைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்தும் வருபவர் மஹுவா மொய்த்ரா. இந்நிலையில், இன்று அவரது அலுவலகத்தின் முன்பாகப் பாஜகவினர் திடீரெனத் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் ஒருகட்டத்தில் வன்முறையாக மாறவே, அங்கிருந்தவர்கள் மஹுவா மொய்த்ராவின் வீட்டை நோக்கி கற்களையும், முட்டைகளையும், காய்கறிகளையும் வீசித் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர். இந்த தாக்குதலில் அவரது ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் நுழைவாயில் கதவுகள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
Currently being attacked by @bjp4india goons with @wbpolice watching on.@MamataOfficial @RahulGandhi @akhliesh @supriya_sule @mkstalin @ArvindKejriwal pic.twitter.com/eD2gYU0NPx
— Mahua Moitra (@MahuaMoitra) July 1, 2026
காவல்துறை வேடிக்கை பார்ப்பதாகக் குற்றச்சாட்டு :
இந்த வன்முறைச் சம்பவம் நடந்து கொண்டிருக்கும் போதே, மஹுவா மொய்த்ரா தனது மொபைல் போன் மூலம் அங்கிருந்த நிலவரத்தைப் படம் பிடித்து வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “பாஜகவைச் சேர்ந்த குண்டர்கள் எனது அலுவலகத்தின் மீது அத்துமீறித் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், எனக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையினர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல், அமைதியாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சி.ஆர்.பி.எஃப் படையினரும் எதுவும் செய்யவில்லை. அவசர உதவிக்காக மாநில டிஜிபி (DGP) உள்ளிட்ட உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால், அவர்கள் யாரும் எனது தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை.
சட்டம்-ஒழுங்கைக் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள உயர் அதிகாரிகளே ஆளுங்கட்சியின் அழுத்தத்தால் போனை எடுக்க மறுக்கிறார்கள். நான் ஒரு எம்.பி., நான் என்னுடைய அலுவலகத்தில் இருக்கிறேன். இங்கிருந்து நான் போகப்போவதில்லை” என்று அவர் அந்த வீடியோவில் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
வலுக்கும் எதிர்ப்பு :
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் இந்தச் சம்பவத்திற்குத் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாகவும், காவல்துறை ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
