அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் வழங்கிய காணிக்கை மற்றும் நன்கொடைகள் தொடர்பாக பெரும் நிதி முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக உத்தரப் பிரதேச அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) தனது முதற்கட்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில், ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட 17 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2024 ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற்ற ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழாவிற்கு பிறகு, உண்டியல் காணிக்கைகள் மற்றும் நன்கொடைகளின் கணக்கீட்டில் சுமார் ரூ.200 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட பல கிலோ தங்கம் மற்றும் 60 கிலோ வெள்ளிக் கட்டிகளும் மாயமானதாக புகார்கள் எழுந்துள்ளன.

விசாரணையில், உண்டியல் எண்ணும் பணிக்காக அறக்கட்டளை நிர்வாகிகளின் பரிந்துரையின் பேரில் ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட சுமார் 150 பேர் பணியில் அமர்த்தப்பட்டதாகவும், அவர்களில் பலரது சொத்து மதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் திடீரென அதிகரித்து அவர்கள் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் அவரது நெருங்கிய உதவியாளரான ராம் பிரசாத் யாதவ் ஆகியோரது பெயர்கள் முக்கியமாக இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, உண்டியல் பெட்டிகளின் ரகசிய சாவிகள் ராம் பிரசாத் யாதவிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும், அவருக்கு அயோத்தியில் ரூ.50 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகவும் SIT வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சம்பத் ராய்க்கு நெருக்கமானவராகக் கருதப்படும் ஃபூல்காந்த் மிஸ்ராவின் சொத்து மதிப்பும் இந்த காலகட்டத்தில் கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
லக்னோவில் உள்ள கூடுதல் தலைமைச் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 150 பக்க இடைக்கால அறிக்கையில், முறைகேட்டில் தொடர்புடைய 17 பேர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும், தற்போதைய அறக்கட்டளையை கலைத்து மறுசீரமைக்க வேண்டும், மேலும் காசி விஸ்வநாதர் கோயில் நிர்வாகத்தைப் போல ஒரு மூத்த அரசு அதிகாரியை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்க வேண்டும் என பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் குறித்து ராமர் கோயில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த முறைகேட்டை “பகற்கொள்ளை” என விவரித்த அவர், தகுதியின் அடிப்படையில் அல்லாமல் குறிப்பிட்ட அமைப்பின் பின்னணியை மட்டும் கருத்தில் கொண்டு ஊழியர்கள் நியமிக்கப்பட்டதே இந்த நிலைக்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். இதற்கிடையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், கோயிலுக்கு வந்த தங்கம், வெள்ளி மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் காணிக்கைகளுக்கான முழுமையான கணக்கை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று கூறி, உத்தரப் பிரதேச அரசை விமர்சித்துள்ளார்.
இந்த நிதி முறைகேடு தொடர்பாக சிபிஐ மற்றும் சிஏஜி மூலம் முழுமையான விசாரணை மற்றும் தணிக்கை நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றம் மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை தற்போது நிலுவையில் உள்ளது. இந்த விவகாரம் அயோத்தி ராமர் கோயில் நிர்வாகம் குறித்த புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவத் தொழில் செய்யக்கூடாது – உச்ச நீதிமன்றம் கருத்து
