சமூக வலைதளங்களில் பரவி வரும் நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான வதந்திகளை மாணவர்கள் நம்ப வேண்டாம் என தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.


வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் (NEET) மறுதேர்வுக்கான வினாத்தாள் கசிந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு தேசிய தேர்வு முகமை (NTA) மறுப்பு தெரிவித்துள்ளது. மறுதேர்வுக்கான வினாத்தாள் கசிவு தொடர்பான தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றும், அவற்றில் எந்தவித உண்மையும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், மறுதேர்வு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ஒவ்வொரு கட்டத்திலும் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தேர்வின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை மாணவர்கள் நம்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, திட்டமிட்டபடி ஜூன் 21-ஆம் தேதி நீட் மறுதேர்வு நடைபெறும் என்றும், தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தேசிய தேர்வு முகமை உறுதிப்படுத்தியுள்ளது.
DRDO-வின் 3 ஏவுகணை சோதனைகள் வெற்றி…இந்திய பாதுகாப்பில் புதிய மைல்கல்!
