கூடுதல் பொறுப்புகள் வகித்தாலும் இரட்டை வாகன அனுமதி கிடையாது; மத்திய நிதி அமைச்சகம் அரசாணை வெளியீடு!
மத்திய அரசுத் துறைகளில் பணிபுரியும் மூத்த அதிகாரிகள் ஒரே ஒரு அரசு வாகனத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற “ஒரு அதிகாரிக்கு ஒரு அரசு கார்” (One Officer One Official Car) கொள்கையை மத்திய நிதி அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது. அரசு வாகனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், தேவையற்ற எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவுகளைக் குறைத்து நிதி விரயத்தைக் கட்டுப்படுத்தவும் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் பொறுப்பு வகித்தாலும் ஒரே கார் தான்
மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் செலவினத் துறை (Department of Expenditure) அனைத்து அமைச்சகங்கள் மற்றும் அரசுத் துறைகளுக்கும் இது தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களைச் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது.
அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “ஏற்கெனவே அரசு கார் வசதியைப் பெறத் தகுதியுள்ள ஒரு மூத்த அதிகாரிக்கு, வேறொரு அமைச்சகம், அரசுத் துறை, பொதுத்துறை நிறுவனம் (PSU) அல்லது தன்னாட்சி அமைப்புகளின் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டாலும், அவருக்குக் கூடுதலாக மற்றொரு அரசு கார் ஒதுக்கப்பட மாட்டாது. அவர் ஏற்கெனவே தமக்கு ஒதுக்கப்பட்ட காரையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.”
முறைக்கேடுகளுக்குச் செக்: கடுமையான கட்டுப்பாடுகள்
அதிகாரப்பூர்வ பணிகளைத் தவிர்த்து, பிற காரணங்களுக்காக பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான வாகனங்களை அதிகாரிகள் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், உபரியாக உள்ள அல்லது பயன்பாட்டில் இல்லாத அரசு வாகனங்களை அதிகாரிகள் விருப்பம்போலப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும், அந்த வாகனங்களைப் பாதுகாப்பாக நிறுத்திவைக்கத் துறைத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட வாகனப் பயன்பாட்டு வழிகாட்டுதல்களை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன ஒதுக்கீட்டில் ஏற்படும் இரட்டைப் பதிவுகள் தவிர்க்கப்பட்டு, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
