திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் உள்ள பூங்கா சாலையில் தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி இந்த நிலம் பழனி தேவஸ்தானத்துடன் இணைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த இந்நிலம் மீட்கப்பட்டு, தற்போது பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக இலவச வாகன நிறுத்தமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


இந்நிலையில், சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான இந்த நிலத்தை வெறும் ரூ.2 கோடிக்கு போலி ஆவணங்கள் மூலம் மோசடியாகப் பதிவு செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்டவிரோதப் பத்திரப்பதிவு மற்றும் விசாரணை
கடந்த ஜூலை 6-ஆம் தேதி, அப்போதைய பொறுப்பு சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இந்த நிலத்தைத் தனிநபர்களுக்குச் சட்டவிரோதமாகப் பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளார்.
இதுகுறித்துத் தகவல் அறிந்ததும் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்ற ‘திருப்புகழ் சுவாமிகள், முருகதாஸ் சுவாமிகள் அண்ட் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளை’யைச் சேர்ந்த முருகதாஸ், நிலத்தை வாங்கிய உடுமலைப்பேட்டை பாப்பான்குளத்தைச் சேர்ந்த வெள்ளைத்துரை, பழனி டி.கே.என். புதூரைச் சேர்ந்த சேதுபதி உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதிகாரிகள் சஸ்பெண்ட் & சிபிசிஐடி விசாரணை
இந்த முறைகேடு தொடர்பாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்டப் பதிவாளர் சசிகலா ஆகியோர் உடனடியாகப் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டனர். மேலும், வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.
சிபிசிஐடி போலீஸார் தேவஸ்தானம் மற்றும் பத்திரப் பதிவு அலுவலகங்களில் நேரில் சென்று ஆவணங்களை ஆய்வு செய்தனர். அதேபோல், பதிவுத்துறை சார்பில் அமைக்கப்பட்ட கூடுதல் பதிவுத்துறை தலைவர் சுதா மல்யா தலைமையிலான உயர்நிலைக் குழுவும் பழனி பதிவாளர் அலுவலகத்தில் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது.
மூலப்பத்திரம் ஒப்படைப்பும் 4 பேர் கைதும்!
இந்தச் சூழலில், தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு நிலத்தை தானமாக வழங்கிய பழனி பாலசமுத்திரத்தைச் சேர்ந்த குப்புசாமி மணியக்காரரின் வாரிசுகள், அதன் உண்மையான மூலப்பத்திரத்தைச் சிபிசிஐடி போலீஸாரிடம் நேற்று (ஜூலை 28) ஒப்படைத்தனர்.
மூலப்பத்திரம் கைக்கு வந்ததையடுத்து, சிபிசிஐடி போலீஸார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். இன்று (புதன்கிழமை) அதிகாலை நிலத்தை விற்ற அறக்கட்டளை நிர்வாகி விழுப்புரத்தைச் சேர்ந்த முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளைத்துரை, சேதுபதி மற்றும் சாட்சி கையெழுத்திட்ட பழனியைச் சேர்ந்த அன்வர்தின் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை சிபிசிஐடி போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஒரே சார்ஜில் 114 கி.மீ மைலேஜ்! சந்தையைக் கலக்க வந்த புதிய ‘Avore EX’ மின்சார பைக்!
