திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 5 மாணவர்கள் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தைக் கண்டித்தும், அப்பகுதியில் நீண்ட காலமாக நிலவி வரும் விபத்துகளைத் தவிர்க்க மேம்பாலம் அமைக்கக் கோரியும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளிப் பேருந்து மீது லாரி மோதிய விபத்து
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிக்குச் சொந்தமான பேருந்து, வழக்கம்போல் மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாகப் பள்ளிப் பேருந்தின் பின்னால் வந்த அதிவேக லாரி, பேருந்து மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபட்டின் தாக்கத்தால் பேருந்தின் பின்பகுதி நசுங்கியதுடன், அதில் பயணம் செய்த 5 பள்ளி மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். உடனே அலறித் துடித்த மாணவர்களின் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து, படுகாயமடைந்த மாணவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல்
சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில காலமாகவே மேம்பாலம் (Flyover) இல்லாத காரணத்தினால், இப்பகுதியில் தொடர்ச்சியாக விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. பள்ளி மாணவர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்களும், பெற்றோர்களும் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர்கள் பறிபோன பிறகும் என்.எச் (NH) நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை” எனக் முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.
போலீசாரின் சமரச பேச்சுவார்த்தை
சாலை மறியல் போராட்டம் குறித்துத் தகவல் அறிந்த ஆம்பூர் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், சென்னை – பெங்களூரு சாலையில் மேம்பாலம் அமைப்பது குறித்து உரிய உயர் அதிகாரிகளின் கவனத்திற்குக்கொண்டு சென்று விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சில மணி நேரம் கடுமையான பரபரப்பு நிலவியது.
