நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் காவல்துறை, மருத்துவத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் இப் பயிற்சியைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார்.
குழந்தைகள் பாதுகாப்பு அலகின் முக்கியத்துவம்
நிகழ்ச்சியில் பேசிய கலெக்டர் பிரவீன்குமார், 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு 2012-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:

பாதுகாப்புக் குழுக்கள்: குழந்தைகளின் பாதுகாப்பை அடிமட்டத்தில் உறுதி செய்வதற்காகக் கிராம, வட்டார, பேரூராட்சி, நகராட்சி மற்றும் வார்டு அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் மாதந்தோறும் கூட்டங்களை நடத்தி, குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகளைக் கண்டறிந்து உடனடியாகத் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
சிறப்பு இல்லங்கள் மற்றும் பராமரிப்பு: பெற்றோரை இழந்தவர்கள், கைவிடப்பட்டவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள், தெருவோரக் குழந்தைகள், பிச்சை எடுக்கும் குழந்தைகள், போக்சோ (POCSO) வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக இல்லங்களில் தங்குமிடம் வழங்கப்பட்டு, அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள் மூலம் ஆற்றுப்படுத்தல் (Counseling) வழங்கப்படுகிறது.
உறவினர் பாதுகாப்பில் வளரும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.4,000 நிதியுதவி
குழந்தைகள் எப்போதும் பெற்றோர் அல்லது உறவினர்களின் அன்பான குடும்பச் சூழலில் வளர வேண்டும் என்பதை வலியுறுத்தி நிதி ஆதரவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக கலெக்டர் குறிப்பிட்டார். இதன் கீழ், உறவினர்களின் பாதுகாப்பில் வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு அரசால் மாதம் ரூ. 4,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் தற்போது இந்தத் திட்டத்தின் மூலம் 270 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.
24 மணி நேரமும் இயங்கும் ‘1098’ உதவி எண்
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 24 மணி நேரமும் செயல்படும் குழந்தைகள் உதவி எண் 1098 பயன்பாட்டில் உள்ளது. பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலெக்டர் அலுவலகம், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் இதுகுறித்த விழிப்புணர்வுப் பலகைகளும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குழந்தைகளுக்கு ஏதேனும் துயரமோ அல்லது ஆபத்தோ ஏற்பட்டால், பொதுமக்கள் உடனடியாக 1098 என்ற இலவச உதவி எண்ணைத் தொடர்புகொண்டு பாதுகாப்பு மற்றும் உதவியைப் பெறலாம் என அவர் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், ஏ.எஸ்.பி. ப்ரியங்கா பார்கவ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் அரங்கநாதன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராசன், மாவட்ட சமூகநல அலுவலர் திவ்யபிரபா, அரசு வழக்கறிஞர் துர்காதேவி உள்ளிட்ட பல முக்கிய அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மண்ணின் வளம் காக்க ராமநாதபுரம் ஆடுகள் வருகை! கொள்ளிடத்தில் களைகட்டும் பாரம்பரிய ஆட்டுக்கிடை அமைப்பு!
