Homeசெய்திகள்இந்தியாசிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி

சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி

-

- Advertisement -

கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓடும் ரயில்களில் இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தி உணவு சமைக்க IRTC முடிவு செய்யப்பட்டுள்ளது.சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி

எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை எதிர்கொள்ள, ரயில்களில் உணவு தயாரிக்கும் முறையில் மாற்றத்தை கொண்டு வர இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) முடிவு செய்துள்ளது. இதன்படி, ஓடும் ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் இனி இன்டக்ஷன் அடுப்புகள் மற்றும் மின்சார சமையல் உபகரணங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட உள்ளன.

we-r-hiring

தற்போது ஒருங்கிணைந்த சமையற்கூடங்களில் தயாரிக்கப்படும் உணவுகள் ரயில்களுக்கு அனுப்பப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. ஆனால், தினசரி சுமார் 1,000 வணிக சிலிண்டர்கள் தேவைப்படும் நிலையில், எல்பிஜி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் ரயில்வேயையும் பாதித்துள்ளது.

இதனால், வந்தே பாரத், ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ உள்ளிட்ட முக்கிய ரயில்களின் பேன்ட்ரி கார்களில் உள்ள மின்சார வசதிகளை பயன்படுத்தி, பயணத்தின் போதே உணவு தயாரிக்கும் திட்டத்தை ஐஆர்சிடிசி செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. சிலிண்டர்களுக்கு மாற்றாக இன்டக்ஷன் அடுப்புகள் பயன்படுத்தப்பட்டு உணவு சமைத்து நேரடியாக பயணிகளுக்கு வழங்கப்படும்.

மேலும், ரயில் நிலையங்களில் செயல்படும் ஜன் ஆஹார் மையங்கள், உணவகங்கள் மற்றும் ஃபுட் பிளாசாக்களிலும் இன்டக்ஷன் அடுப்புகள் மற்றும் மைக்ரோவேவ் ஓவன்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில்வேயின் சமையல் பணிகளில் சுமார் 60 சதவீதம் மின்சார முறைக்கு மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே தினசரி சுமார் 17 லட்சம் பயணிகளுக்கு உணவு வழங்குகிறது. ஆண்டுக்கு 580 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு உணவு தயாரிக்கப்படும் நிலையில், சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களிடமிருந்து முன்னுரிமை அடிப்படையில் எல்பிஜி பெற ஐஆர்சிடிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கிடையில், சமையல் செலவுகள் மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக ஐஆர்சிடிசியின் லாப விகிதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரயில் உணவுகளின் கட்டணம் உயர்த்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதுகுறித்த இறுதி முடிவை ரயில்வே அமைச்சகம் எடுக்கும் என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

MUST READ