அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பண மோசடி தொடர்பான வழக்கை, உச்சநீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறை முடிவடைந்தவுடன் விசாரணைக்குப் பட்டியலிடுவதாக உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தற்போதைய விடுமுறை கால அமர்வில் வழக்கறிஞர் ஒருவர் இந்த விவகாரம் தொடர்பாக அவசர முறையீடு ஒன்றைச் செய்தார். அப்போது அவர், “அயோத்தி ராமர் கோயிலில் பெருமளவுக்கு உண்டியல் பண மோசடி நடைபெற்றுள்ளது. இது கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வு மற்றும் ஆன்மீகக் கொடையோடு தொடர்புடைய மிக முக்கியமான விவகாரமாகும். மேலும், இந்த மோசடிச் சம்பவத்திற்கு ஆதாரமாக விளங்கக்கூடிய சிசிடிவி (CCTV) காட்சிகள் உள்ளிட்ட முக்கியத் தடயங்கள் மற்றும் ஆதாரங்கள் தற்போது காணாமல் போயுள்ளன. எனவே, தடையங்கள் மேலும் அழிக்கப்படுவதற்குள் இந்த மிக முக்கியமான வழக்கை அவசர வழக்காக ஏற்றுக்கொண்டு நீதிமன்றம் உடனடியாக விசாரிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

உச்சநீதிமன்ற அமர்வின் பதில்
இந்த அவசர முறையீட்டை விசாரித்த நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் தலைமையிலான உச்சநீதிமன்ற விடுமுறை கால அமர்வு, வழக்கின் தீவிரத்தன்மையை ஏற்றுக்கொண்டது. எனினும், தற்போதைய விடுமுறை காலச் சூழலைக் கருத்தில் கொண்டு, உச்சநீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறை முடிந்து நீதிமன்றம் முழுமையாகத் திறக்கப்பட்டவுடன், இந்த வழக்கு வழக்கமான விசாரணைப் பட்டியலின் கீழ் கொண்டு வரப்பட்டு விரிவாக விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது. ராமர் கோயில் உண்டியல் வருவாயில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகாரும், அதன் சிசிடிவி ஆதாரங்கள் காணாமல் போயுள்ளதாக நீதிமன்றத்தில் முறையிடப்பட்டிருப்பதும் நாடு முழுவதும் ஆன்மீகவாதிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை முறைகேடு: கைதான 8 பேரின் வீடுகளில் போலீஸ் சோதனை
