
இயக்குநர், நடிகரைத் தொடர்ந்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த பிரதீப் ரங்கநாதன் தனது ‘PR Show’ நிறுவனத்தின் முதல் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
‘கோமாளி’, ‘லவ் டுடே’, ‘டிராகன்’, ‘டியூட்’ என தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே ‘100 கோடி பாக்ஸ் ஆபீஸ் நாயகன்’ என முத்திரை பதித்த இளம் இயக்குநர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன், தற்போது தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவர் ‘PR Show’ என்ற சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, அதன் முதல் திரைப்படமான #PRS1 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிரடியான வீடியோவுடன் வெளியிட்டுள்ளார்.

இளம் தலைமுறை ரசிகர்களின் பல்ஸை நன்கு அறிந்த பிரதீப், தனது முதல் தயாரிப்பிலேயே தமிழ் சினிமா இதுவரை கண்டிராத ஒரு விசித்திரமான மற்றும் புதுமையான முயற்சியைக் கையாண்டுள்ளார்.
6 இயக்குநர்கள் இணையும் ‘ஆல்பா யூனிட்’ (The Alpha Unit)
வழக்கமாக ஒரு திரைப்படத்தை ஒருவரோ அல்லது இருவரோ இயக்குவதுதான் வழக்கம். ஆனால், பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் இந்த முதல் திரைப்படத்தை அவருடைய 6 உதவி இயக்குநர்கள் இணைந்து ‘ஆல்பா யூனிட்’ (The Alpha Unit) என்ற பெயரில் கூட்டு முயற்சியாக எழுதி, இயக்கவுள்ளனர். தமிழ் திரையுலகில் இது ஒரு மிகப்பெரிய மற்றும் சுவாரசியமான முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது. இப்படத்தின் கதையை பிரதீப் ரங்கநாதனே எழுதியுள்ளார்.

மமீதா பைஜு – அஸ்வத் மாரிமுத்து கூட்டணி
இப்படத்தில் ‘பிரேமலு’ மற்றும் பிரதீப்பின் ‘டியூட்’ (Dude) திரைப்பட புகழ் மமீதா பைஜு முதன்மைக் கதாபாத்திரத்தில் (கதாநாயகியாக) நடிக்கிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆக்ஷன் என்டர்டெய்னராக இப்படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
இவருடன் இணைந்து, பிரதீப்பின் ‘டிராகன்’ திரைப்படத்தை இயக்கிய பிரபல இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இத்திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் காவல்துறை அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களுடன் தெலுங்கு நடிகர் சிவாஜி சோண்டினேனி, ஸ்வாசிகா, லிசி ஆண்டனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும், அனாமிகா மஹி என்ற புதுமுக நடிகை இப்படம் மூலம் அறிமுகமாகிறார்.
வைரலாகும் அதிகாரப்பூர்வ வீடியோ
இப்படத்தின் அறிவிப்பு வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், கத்தியை மமீதா பைஜு வீச, அதை அஸ்வத் மாரிமுத்து அசால்ட்டாகப் பிடிப்பது போன்ற ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ‘PR NEXT WAVE’ என்ற டேக்லைனுடன் இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்த வீடியோவை குறிப்பிட்டு இயக்குநர் அஸ்வர் மாரிமுத்து தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “வாழ்த்துகள் பிரதீப் ரங்கநாதன்! உங்களது முதல் தயாரிப்பில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி, உயரே பறங்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
Congrats on your first production @pradeeponelife ❤️❤️ fly high 🧨 ! happy to be a part 😊 https://t.co/dtTDkQa0JQ
— Ashwath Marimuthu (@Dir_Ashwath) July 6, 2026
தொழில்நுட்பக் குழுவினர்:
மேலும் இந்தப்படத்திற்கு தற்போதைய இளைஞர்களின் ஃபேவரிட் இசையமைப்பாளராக மாறியுள்ள சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் ஈ. ராகவ் படத்தொகுப்பு (Editing) பணிகளைக் கவனிக்கிறார். PRS1 அறிவிப்பு வீடியோ வெளியானது முதல் திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
