விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த ‘96’ திரைப்படம் 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. பள்ளிப் பருவத்தில் மலரும் காதல், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும் காதலர்களின் உணர்வுகள் என அழகான திரைக்கதையுடன் உருவான இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
படத்தில் விஜய் சேதுபதி ராம் கதாபாத்திரத்திலும், த்ரிஷா ஜானு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். பள்ளி நாட்களில் தொடங்கிய காதல் நிறைவேறாமல் போன நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் பள்ளி நண்பர்களின் சந்திப்பில் மீண்டும் சந்திப்பதே படத்தின் மையக்கதையாக அமைந்தது.
படத்தின் உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் கோவிந்த் வசந்தா இசையில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக ‘காதலே காதலே’, ‘தி லைஃப் ஆஃப் ராம்’ உள்ளிட்ட பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ‘96’ திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 9-ம் தேதி ‘96’ திரைப்படம் உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
‘96’ திரைப்படம் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷாவின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்ததுடன், இயக்குநர் பிரேம் குமாருக்கும் குறிப்பிடத்தக்க வெற்றியைத் தேடித்தந்தது. தற்போது மீண்டும் வெளியாக உள்ளதால், படத்தை திரையரங்கில் தவறவிட்ட ரசிகர்களுக்கும் பழைய ரசிகர்களுக்கும் இது ஒரு சிறப்பு வாய்ப்பாக அமைய உள்ளது.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ரசிகர்களை பள்ளிப் பருவ நினைவுகளுக்குள் அழைத்துச் சென்ற ‘96’, ரீ-ரிலீஸிலும் அதே வரவேற்பை பெறுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
“ஆமாம், நான் கருப்புதான்!” – உருவக் கேலி விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ பதிலடி!
