Homeசெய்திகள்அரசியல்"ஓடுவது, ஒளிவது எல்லாம் திமுக-வினருக்கு இல்லை": சம்மன் சர்ச்சைக்கும், சிங்கப்பூர் பயணத்திற்கும் எ.வ.வேலு அதிரடி விளக்கம்!

“ஓடுவது, ஒளிவது எல்லாம் திமுக-வினருக்கு இல்லை”: சம்மன் சர்ச்சைக்கும், சிங்கப்பூர் பயணத்திற்கும் எ.வ.வேலு அதிரடி விளக்கம்!

-

- Advertisement -

“ஓடுவது, ஒளிவது, பதுங்குவது எல்லாம் திமுக-வினரின் ரத்தத்திலேயே இல்லை; தலைவர் கலைஞரோ, தளபதி ஸ்டாலினோ எங்களை அப்படி வளர்க்கவில்லை. அரசியலை நாங்கள் அரசியல் ரீதியாகவே எதிர்கொள்வோம்” என்று திமுக-வின் சட்டமன்றக் கொறடா எ.வ.வேலு ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார். தன் மீதான விசாரணை மற்றும் சிங்கப்பூர் மருத்துவப் பயணம் குறித்து எழுப்பப்பட்ட சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் விரிவான விளக்கங்களை அளித்துள்ளார்.
எ.வ.வேலு

சிங்கப்பூர் பயணம் திட்டமிடப்பட்டது: தேதிகளுடன் விளக்கம்
​தனது சிங்கப்பூர் பயணம் குறித்துப் பரப்பப்பட்ட வதந்திகளுக்குத் தேதிகளுடன் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார்:
​மருத்துவப் பின்னணி: கடந்த 2016-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் நான் இருதயம் தொடர்பான சிகிச்சை பெற்றேன். தொடர்ந்து, 2023 செப்டம்பர் 29 அன்று அங்கு மறுபரிசோதனை செய்யப்பட்டது.

we-r-hiring

​முன்பதிவு விவரம்: தேர்தல் முடிந்த பிறகு, வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக ஜூன் 15-ஆம் தேதி விசா விண்ணப்பம் செய்து, 17-ஆம் தேதி விசா கிடைத்தது. விசா கிடைத்த அன்றே (ஜூன் 17) சிங்கப்பூர் செல்வதற்காக ஜூன் 25-ஆம் தேதிக்கான விமான டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டன.

சோதனைக்கு ஒத்துழைப்பு: நான் சிங்கப்பூர் புறப்படவிருந்த ஜூன் 25-ஆம் தேதிதான் எனது வீட்டிற்குச் சோதனை செய்ய வந்தனர். நான் எங்கும் ஓடவில்லை; காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன். காவல் அதிகாரி புகழ்வேந்தனிடம் நான் சிங்கப்பூர் செல்லவிருந்த விவரத்தையும் முன்கூட்டியே தெரிவித்திருந்தேன்.

​சம்மன் விவகாரமும் ஆஜராவதும்
​காவல்துறையின் சம்மன் குறித்துப் பேசிய அவர், “கடந்த 9-ஆம் தேதி வரை அலர்ஜிக்காக நான் மருத்துவச் சிகிச்சை பெற்று வந்தேன். இதற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளன. காவல்துறை தரப்பில் ஜூலை 3-ஆம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பியபோது, நான் சிங்கப்பூரில் இருந்து வர 10 நாட்கள் ஆகும் என்றும், சென்னை திரும்பவே 10-ஆம் தேதிக்கு மேல் ஆகும் என்றும் கடிதம் மூலம் தெரிவித்தேன்” என்றார்.

​மேலும், “அப்படி இருந்தும் மீண்டும் 9-ஆம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். இதையடுத்து, ஜூலை 12-ஆம் தேதிக்கு முன்பாக எந்தத் தேதியில் வேண்டுமானாலும் ஆஜராகத் தயார் என மீண்டும் கடிதம் அனுப்பினேன். தற்போது வருகிற 15-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராவேன்” என்று எ.வ.வேலு அறிவித்துள்ளார்.

​”குற்றம் செய்யவில்லை; நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது”
​திமுவினர் எதற்கும் அஞ்சமாட்டார்கள் என்று குறிப்பிட்ட அவர், “தற்போது நான் திமுக-வின் சட்டமன்றக் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளேன். சட்டமன்றக் கூட்டத்தொடரில் மக்களுக்காக அதிகப்படியான கேள்விகளை நான் எழுப்பியுள்ளேன். நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை; நாட்டின் நீதிமன்றங்கள் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது” என்று நெஞ்சுரத்தோடு தெரிவித்துள்ளார்.

MUST READ