“கரூருக்குச் சென்றுள்ள முதலமைச்சர் விஜய், வழக்கம் போலத் தனது வசனகர்த்தா எழுதிக் கொடுத்த சினிமா ஸ்கிரிப்டை மேடையில் முழங்கியுள்ளார். தன்னைப்பார்க்க வந்து உயிரிழந்த மக்களுக்குப் பொதுவெளியில் ஒரு மன்னிப்புக் கூடக் கேட்க அவருக்கு மனமில்லை,” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மிகக் கடுமையாக விமரிசித்துள்ளார்.


கரூரில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரைக்குச் சுடச்சுடப் பதிலடி கொடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள காரசாரமான பதிவின் விவரம் பின்வருமாறு:
”தில் இருக்கா..?” – விஜய்யின் கரூர் உரை
கரூரில் இன்று காலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசியதாவது:
”என் நெஞ்சில் குடியிருக்கும் கரூர் சொந்தங்களே… நிறைய வலிகள், காயங்களைத் தாண்டித்தான் நான் வந்திருக்கிறேன். இதில் கரூர் சம்பவம்தான் எனக்கு அதிக மனவலியைத் தந்தது. என் அக்கா, தங்கைகளையும் கள்ளங்கபடமற்ற குழந்தைகளையும் நான் கரூரில் இழந்தேன்.
பெரம்பலூர் செல்லும் முன் கூட்டம் அதிகமாக இருப்பதால் அங்கு செல்ல வேண்டாம் எனப் போலீஸ் கூறியது.
ஆனால், நாமக்கல்லில் இருந்து கரூர் வந்தபோது அங்கிருந்த காவல்துறை எங்களை அலர்ட் செய்யாதது ஏன்? நெடுஞ்சாலையிலிருந்து எங்களைச் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்ததே போலீஸ்தான். போலீஸ் நினைத்திருந்தால் கரூர் நிகழ்ச்சியையே ரத்து செய்திருக்கலாம். ஆனால், அவர்கள் எங்களை அந்த இடத்திற்குப் பின்னால் கூட்டிட்டுப் போன ஒரு நாடகம் இருக்கு பாருங்க… அதை நான் நம்பிட்டேன். அதனால்தான் அன்று கூட்டத்தில் போலீஸாருக்கு நன்றி சொன்னேன்.
வலியோடு இருந்த என்னை ஓடி ஒளிந்துவிட்டேன் என்று கூறுவதா? பணமா, ஜனமா என்றால் எனக்கு ஜனம்தான் முக்கியம். நமக்கு வேதனையைக் கொடுத்தவர்களுக்கு 2026-ல் மக்கள் தக்க பதிலடி கொடுத்துவிட்டீர்கள். ஆனால், அது மட்டும் போதாது; அவர்கள் எழுந்திருக்கவே முடியாத அளவிற்கு நிரந்தரமான பதிலடியைக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.
மக்கள் அமைத்துக் கொடுத்த இந்த அரசு மீது சிலர் டிசைன் டிசைனாகக் குறை கூறுகிறார்கள். தீய சக்தியும், தீர்ந்த சக்தியும் ‘பார்ட்டி ஃபண்ட்’ (Party Fund) என்ற பெயரில் அனைத்து துறைகளிலும் கொள்ளையடிக்கிறார்கள். சட்டசபையில் ‘பார்ட்டி ஃபண்ட்’ என்று நான் கூறியதும் அவர்கள் எடுத்தார்கள் பாருங்கள் ஒரு ஓட்டம்! குற்றம் உள்ள நெஞ்சம்தான் குறுகுறுக்கும்.
இனிவரும் தலைமுறைக்கு இந்தச் சதியைத் தெரியப்படுத்த கரூரில் தவெக சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும். நான் ‘ரீல் அல்ல ரியல் தாய்மாமன்’. அறிஞர் அண்ணா பிறந்தநாளின் போது ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ அறிமுகம் செய்யப்படும். என்னைப் பார்த்து ‘வாயைத் திறங்க சிஎம்’ என்கிறார்கள். உங்களது முதல்வரை நெஞ்சில் குத்திவிட்டு வந்தது வேற லெவல். பேசினால் எழுந்து ஓடுகிறார்கள். இனிமேல் சபாநாயகரிடம் சொல்லி கதவுகளை மூடச் சொல்லிப் பேச வேண்டியதுதான். 5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டுவிட்டார்கள். இதற்கு மேல் பேசினால் மொத்தமாக முடிந்துவிடும்.”
இவ்வாறு முதலமைச்சர் விஜய் கரூரில் காரசாரமாகப் பேசினார்.
ஜெயக்குமாரின் அதிரடிப் பதிலடி: “வாக்குறுதி அள்ளித் தரும் நடிகர்!”
முதலமைச்சரின் இப்பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து ஜெயக்குமார் வெளியிட்டுள்ள பதிவில்:
1. இது மக்கள் சந்திப்பு அல்ல; தேர்தல் பிரசாரம்:
“என் நெஞ்சில் நீங்காமல் இருக்கும் கரூர் மக்களைச் சந்திக்கப் போகிறேன் என்று சொன்ன முதலமைச்சர், உண்மையில் இடைத்தேர்தலுக்காகப் பிரசாரம் செய்யவே கரூர் சென்றுள்ளார். மேலும், ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்று முன்பு அள்ளித் தந்த அதே கவர்ச்சி வாக்குறுதிகளை மீண்டும் ஒருமுறை புதிய வாக்குறுதிகளாகக் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்.”
2. அநாகரிகமான பேச்சு டிரேட் மார்க்:
“மீண்டும் மீண்டும் தனது தவறை உணராமல் ஒட்டுமொத்தக் காவல்துறை மீது பழி போடுவது, பஞ்ச் டயலாக் அடிப்பது, மற்றும் ‘தில் இருக்கா, திராணி இருக்கா, ஒரு * * உம் கிடையாது’ என்று பொதுமேடையில் அநாகரிகமான சொற்களைப் பயன்படுத்திப் பேசுவது போன்ற தனது ‘டிரேட் மார்க்’ சினிமாப் பேச்சுகளையே முதலமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார்.”
3. ரசிக மனநிலையிலேயே வைக்கும் சூழ்ச்சி:
“நான் மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன் என்று சொல்லும் முதலமைச்சருக்கு, தன்னைத் திரையாகப் பார்க்க வந்து கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களுக்கோ அல்லது அவரது குடும்பத்தாருக்கோ பொதுவெளியில் ஒரு சின்ன மன்னிப்புக் கேட்கக் கூட மனது வரவில்லை. மாறாக, தங்களை நம்பி மாற்றத்திற்கான அரசியலை நோக்கி வரும் மக்களை உசுப்பேற்றி, அவர்களை எப்போதும் ஒரு ‘ரசிக மனநிலையிலேயே’ வைத்திருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.”
4. உங்கள் கட்சியின் முறைகேடுகள் தெரியவில்லையா?:
“தீர்ந்து போன சக்தியிலிருந்து (அதிமுக) குதிரை பேரத்தில் ஆள் பிடிக்கும் முதலமைச்சர் அவர்களே… ‘Party Fund’ பற்றிப் பேசினால் திமுக ஓடுவது உண்மைதான். ஆனால், உங்கள் கட்சியினர் (தவெக) செய்யும் முறைகேடுகள் நாளொரு வண்ணம் செய்திகளில் வருவதை நீங்கள் பார்ப்பதில்லையோ? முடிந்தால் சற்றுப் பாருங்கள்.”
5. What bro, it’s very wrong bro!:
“நடிகரைப் பார்க்க வந்து விபத்தில் இறந்தவர்களுக்கு அரசு செலவில் நினைவு மண்டபம், அவர்களின் உறவினர்களுக்கு அரசு வேலை வழங்குவதா? What bro, it’s very wrong bro!! இது ஏமாற்று மாற்றம்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மிகக் கடுமையான மொழியில் முதலமைச்சர் விஜய்யைச் சாடியுள்ளார்.
