Homeசெய்திகள்அரசியல்"விஜய் வாயைத் திறந்தால் கூவம் சாக்கடை தான் வருகிறது!" – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும்...

“விஜய் வாயைத் திறந்தால் கூவம் சாக்கடை தான் வருகிறது!” – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

-

- Advertisement -

கரூரில் தமிழக முதல்வர் விஜய் பேசிய பேச்சு ஆணவத்தின் உச்சமாக உள்ளது என்றும், அவர் இன்னமும் தன்னை ஒரு நடிகராகவே அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறாரோ என்ற சந்தேகம் எழுவதாகவும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

விஜய்

we-r-hiring

​செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தமிழக முதல்வர் விஜய்யின் சமீபத்திய அரசியல் பேச்சுகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு கண்டனங்களை வெளிப்படுத்தினார்.

“கூட்டு களவாணிகள் எனக் கூற விஜய்க்கு என்ன தகுதி உள்ளது?”
​பேரறிஞர் அண்ணா கொட்டும் மழையில் தொடங்கிய 75 ஆண்டுகள் பவளவிழா காணும் திமுகவையும், ஏழை எளிய மக்களுக்காகப் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுகவையும் ‘கூட்டு களவாணிகள்’ என்று விஜய் விமர்சித்திருப்பது கோடிக்கணக்கான தொண்டர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது என்று ஆர்.பி.உதயகுமார் சாடினார்.

​”இதைச் சொல்வதற்கு முன்பு விஜய் இந்த நாட்டிற்கு என்ன தியாகம் செய்தார்? சமூக நீதிப் போராட்டத்திலோ, பெண் உரிமைக்காகவோ அல்லது மக்களின் கல்வி உரிமைக்காகவோ தனது இளமைப் பருவத்தை தியாகம் செய்துள்ளாரா? 69% இட ஒதுக்கீட்டிற்காகப் போராடிய, ஏழைகளுக்குச் சத்துணவு தந்த இயக்கங்களைக் கேவலப்படுத்தலாமா?” என அவர் கேள்வி எழுப்பினார்.

ஜென்சி (Gen Z) தலைமுறையைத் தவறாக வழிநடத்துகிறார்
​அதிர்ஷ்டத்தால் முதல்வர் அரியணை கையில் வந்துவிட்டதாலும், ‘ஜென்சி’ (Gen Z) தலைமுறை ஆதரிக்கிறது என்ற காரணத்தினாலும், அந்த இளைஞர்களின் உணர்ச்சியைத் தூண்டி, வரலாற்றைத் திரித்துக் கூறி விஜய் தவறாக வழிநடத்தி வருகிறார் என்று ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார்.

“சினிமாவில் நடித்துவிட்டு வருமான வரி செலுத்தாத களவாணி யார் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். கரூரில் 49 பேர் இறந்தபோது அத்தனை பேரையும் சவக்காட்டில் விட்டுவிட்டு, கரூரையே சுடுகாடாக்கிவிட்டு ஓடி ஒளிந்தவர் தான் இந்த விஜய்” என்றும் அவர் மிகக் காட்டமாக விமர்சித்தார்.

அரியணை நிரந்தரமல்ல – ஆடி காற்றில் அம்மியும் பறக்கும்!
​காமராஜர், ராஜாஜி, அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடியார், ஸ்டாலின் போன்ற தலைவர்கள் 80 ஆண்டுகாலம் வியர்வை சிந்தி, தியாகம் செய்து அமர்ந்த கண்ணியமிக்க அரியணை அது என்பதை விஜய் மறந்துவிட்டார் எனக் குறிப்பிட்ட அவர், மேலும் கூறியதாவது:
​பேரிடர் காலங்களில் எங்கே போனார்?: கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலோ, மொழி காக்கும், இனம் காக்கும் போராட்டங்களிலோ விஜய்யை மக்கள் களத்தில் பார்க்கவில்லை.

ஆடி காற்று அடக்கும்: இந்த ஆணவப் போக்கு தொடர்ந்தால், ஆடி காற்றில் அம்மியும் பறப்பதைப் போல விஜய்யின் அரியணைக்கு எவ்வித உத்தரவாதமும் இருக்காது. ஆடி காற்று வரும்போது அவரது ஆட்டமும் பாட்டமும் அடியோடு அடக்கப்படும்.
​மக்களின் மௌனம் பயத்தால் அல்ல: இந்த இயக்கங்கள் தந்த சத்துணவைச் சாப்பிட்டு, மடிக்கணினி பெற்று, கல்வி கற்று உயர்ந்த கோடிக்கணக்கான தன்மானமுள்ள தொண்டர்கள் மௌனமாக இருப்பது பயத்தினால் அல்ல.
​”கரூரில் நின்றுகொண்டு காட்டுக்கூச்சல் போடுபவர்களுக்கு நாட்டுக்குள் என்ன வேலை? இனிமேலும் இப்படிப்பட்ட காட்டுக்கூச்சலைத் தொடர்ந்தால், உங்களைக் காட்டுக்குள்ளே அனுப்புவதற்குத் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார்.

MUST READ