Homeசெய்திகள்க்ரைம்பழனி முருகன்கோவில் இடத்தில் ரூ.100 கோடி பத்திரப்பதிவு மோசடி: சார்பதிவாளர் சஸ்பெண்ட் – 5 பேர்...

பழனி முருகன்கோவில் இடத்தில் ரூ.100 கோடி பத்திரப்பதிவு மோசடி: சார்பதிவாளர் சஸ்பெண்ட் – 5 பேர் மீது வழக்குப்பதிவு!

-

- Advertisement -

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் கட்டுப்பாட்டில் இருந்த, சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான மடத்தின் இடத்தை, போலி ஆவணங்கள் மூலம் தனி நபர்களுக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்து கொடுத்த விவகாரத்தில், சார்பதிவாளர் உட்பட 5 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார். ​இச்சம்பவம் பழனி பகுதியில் பெரும் பரபரப்பையும், பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.​பழனி முருகன்கோவில் இடத்தில் ரூ.100 கோடி பத்திரப்பதிவு மோசடி: சார்பதிவாளர் சஸ்பெண்ட் – 5 பேர் மீது வழக்குப்பதிவு!

​பழனி மலை அடிவாரத்தில் பழங்காலம் தொட்டே ‘தண்டபாணி சுவாமிகள் மடம்’ செயல்பட்டு வந்தது. பழனிக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும், தங்கும் வசதி ஏற்படுத்தவும், இந்து மதத்தை வளர்க்கவும் இந்த இடம் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கில் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளை நிறுவப்பட்டிருந்தது. ​சுவாமிகளின் மறைவிற்குப் பின், மடத்தின் நிர்வாகிகள் இந்த இடத்தை வணிக ரீதியாகப் பயன்படுத்த முயன்றனர். இதனையறிந்த இந்து சமய அறநிலையத்துறை நீதிமன்றத்தை நாடி, மடத்தை அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. கோவிலின் அப்போதைய இணை ஆணையர் மாரிமுத்து இதன் தர்க்காராக (நிர்வாகி) நியமிக்கப்பட்டு, தற்போது அந்த இடம் பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களின் பயன்பாட்டிற்காகக் ‘கட்டணமில்லா வாகன நிறுத்தமாக’ மாற்றப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

we-r-hiring

​நடைபெற்ற ₹100 கோடி நில மோசடி
​கோவில் கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடத்தை, கடந்த ஜூலை 6-ஆம் தேதி சில நபர்கள் இணைந்து, 2 கோடி ரூபாய் என மதிப்பிட்டு வெள்ளத்துரை, சேதுபதி ஆகிய இருவரது பெயரில் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்துள்ளனர். திருப்புகழ் சுவாமிகள், முருகதாஸ் சுவாமிகள் மற்றும் தண்டபாணி சுவாமிகள் டிரஸ்ட் இணைந்து இந்த மோசடிப் பதிவை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ​உண்மை மதிப்பு 100 கோடி ரூபாய் கொண்ட கோவில் இடத்தை, உரிய ஆவணங்களைச் சரிபார்க்காமல் தனி நபர்களுக்குப் பதிவு செய்து கொடுத்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனின் செயல் வெளிச்சத்திற்கு வந்ததும் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.பழனி முருகன்கோவில் இடத்தில் ரூ.100 கோடி பத்திரப்பதிவு மோசடி: சார்பதிவாளர் சஸ்பெண்ட் – 5 பேர் மீது வழக்குப்பதிவு!

​சார்பதிவாளர் சஸ்பெண்ட் & 5 பேர் மீது பாய்ந்தது வழக்கு
​இந்த மோசடி குறித்துத் தகவலறிந்த பழனி கோவில் இணை ஆணையர், இந்த முறைகேடான பத்திரப்பதிவை ரத்து செய்யக் கோரி பத்திரப்பதிவுத்துறை மண்டல அதிகாரி மற்றும் இயக்குனருக்கு உடனடியாக மனு அளித்தார். ​தொடர்ந்து, மோசடிக்குத் துணைபோன சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகிகள் திருப்புகழ் சுவாமிகள், முருகதாஸ் சுவாமிகள் மற்றும் நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி ஆகிய 5 பேர் மீது பழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் 5 பேர் மீதும் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ​இவ்விவகாரத்தில், முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்து கொடுத்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்து சார்பதிவாளர் உள்ளிட்ட 5 பேரும் தலைமறைவாகியுள்ளதால், அவர்களைக் கைது செய்யப் போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.

​உயரதிகாரிகள் சதியா? பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
​”பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் வழக்கமாகப் பணிபுரியும் அதிகாரி விடுப்பில் சென்ற சமயம் பார்த்து, இந்த மோசடியை அரங்கேற்றுவதற்காகவே திட்டமிட்டு சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இங்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் பத்திரப்பதிவுத்துறையின் உயரதிகாரிகள் பலருக்கும் லஞ்சப் பணம் கைமாறியிருக்க வாய்ப்புள்ளது.” என பக்தர்கள் குற்றச்சாட்டு. ​எனவே, இந்த ₹100 கோடி நில மோசடி விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தி, இதற்குப் பின்னால் இருந்து இயக்கிய முக்கியப் புள்ளிகளையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும், போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை வாங்கியவர்களின் பின்னணியை ஆராய்வதோடு, கோவில் சொத்தைப் பாதுகாக்கத் தவறிய அறநிலையத்துறை அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி தொழிற்சாலை மீது ஏற்கனவே 18 பிரிவுகளில் வழக்கு: அமைச்சர் முகமது பர்வேஸ் அதிரடிப் பேட்டி!

MUST READ