சென்னை அரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் கருப்பு நிற ஸ்டிக்கரை ஒட்டி, வாடிக்கையாளர்கள் எடுக்கும் பணத்தை வெளியே வரவிடாமல் தடுத்து நூதன முறையில் திருடிய வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இரண்டு சிறார்கள் சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ரூ.53,200 ரொக்கப்பணம் மற்றும் ஐந்து செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஏடிஎம்மில் பணம் வராததால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள்
சென்னை சூளைமேடு சுப்பாராவ் நகரில் வசித்து வரும் கோதாவரி (77) என்பவர், கடந்த 13-ஆம் தேதி காலை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனி மெயின் ரோட்டில் உள்ள தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு ரூ.10,000 பணம் எடுக்க முயன்றபோது, ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணம் வெளியே வரவில்லை. ஆனால், அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.10,000 எடுக்கப்பட்டதாகக் குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதேபோல், மற்றொரு வாடிக்கையாளர் ரூ.2,000 எடுக்க முயன்றபோதும் பணம் வெளியே வராமல், கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாகக் குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள், ஏடிஎம்மில் நடைபெறும் நூதனத் திருட்டு குறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டி பணம் திருட்டு
புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ஏடிஎம் மையத்தின் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 17 வயது சிறாரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அந்தச் சிறார் தனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு ஏடிஎம் இயந்திரத்தில் கருப்பு நிற ஸ்டிக்கரை ஒட்டி, பணம் வெளியே வரும் பகுதியை மறைத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முயன்றபோது, கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டாலும், பணம் இயந்திரத்திலிருந்து வெளியே வராமல் தடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
வாடிக்கையாளர்கள் அங்கிருந்து சென்ற பிறகு, ஸ்டிக்கரை அகற்றி பணத்தை எடுத்துச் சென்றதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
திரிபுராவைச் சேர்ந்த இருவர் கைது
விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வடக்கு திரிபுரா பகுதியைச் சேர்ந்த ஷகீல் அகமது (19), முகமது முபின்ஹக் (20) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும், 17 வயதுடைய மற்றொரு சிறாரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
திரிபுராவிலிருந்து சென்னைக்கு வந்த இந்தக் குழுவினர், ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்டிக்கர் ஒட்டி பணத்தைத் திருடும் செயல்களில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரூ.53,200 பணம், 5 செல்போன்கள் பறிமுதல்
இந்த வழக்கு தொடர்பாக, மொத்தம் ரூ.53,200 ரொக்கப்பணம், இரண்டு ஐபோன்கள் உட்பட ஐந்து செல்போன்கள் மற்றும் குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஸ்டிக்கர், கத்தரிக்கோல், பிளைவுட், பிளேடு, கத்தி உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர். இரண்டு சிறார்களும் சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.
ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராமல், வங்கிக் கணக்கிலிருந்து மட்டும் பணம் எடுக்கப்பட்டதாகக் குறுஞ்செய்தி வந்தால், உடனடியாக வங்கிக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
தவெக நிர்வாகி வீட்டில் 135 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் – 8 மணி நேர சோதனைக்குப் பிறகு இருவர் கைது!
