“பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘காமராஜ்’ திரைப்படத்தை அரசு நாட்டுடைமையாக்க வேண்டும்” என்று அப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஏ.ஜே. பாலகிருஷ்ணன், தமிழக வெற்றிக் கழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடன் சுமையால் தவித்து வரும் தனக்கு, காமராஜரைத் தனது வழிகாட்டியாகக் கொண்டுள்ள முதலமைச்சர் விஜய் கரம் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் அவர் எழுதியுள்ள கடிதத்தின் விரிவான விவரம் வருமாறு,

காமராஜரின் முதல் திரை ஆவணம்
பெருந்தலைவர் காமராஜரின் தியாக வாழ்வையும், அவரது மக்கள் நலப் பணிகளையும் இன்றைய தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் நோக்கில், ‘காமராஜ்’ என்ற பெயரில் ஏ.ஜே. பாலகிருஷ்ணன் திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டார். பெருந்தலைவருக்காக எடுக்கப்பட்ட முதல் முழு நீளத் திரை ஆவணமாக அமைந்த இத்திரைப்படம், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரது பாராட்டுகளையும் பெற்றது.
தீராத கடன் சுமை; தவிக்கும் இயக்குநர்
இத்திரைப்படத்தைத் தயாரிப்பதற்காகப் பல்வேறு தரப்பிலும், வங்கிகளிலும் பெரும் தொகையைக் கடனாகப் பெற்றதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். ‘காமராஜ்’ திரைப்படத்திற்குப் பிறகு, அவர் இயக்கிய ‘வெல்கம் பேக் காந்தி’ (WELCOME BACK GANDHI) மற்றும் ‘திருக்குறள்’ போன்ற திரைப்படங்களும் எதிர்பார்த்த அளவு பொருளாதார ரீதியாகக் கைகொடுக்கவில்லை. இதன் காரணமாகக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல், மிகுந்த மன உளைச்சலுடனும், கடன் கொடுத்தவர்களை எதிர்கொள்ளும் துணிவின்றியும் வாழ்ந்து வருவதாகத் தனது கடிதத்தில் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
பிற மாநில அரசுகளின் முன்னுதாரணங்கள்
மத்திய மற்றும் பிற மாநில அரசுகள் வரலாற்றுத் தலைவர்களின் திரைப்படங்களுக்கு வழங்கிய உதவிகளைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், ’காந்தி’ திரைப்படத்திற்கு மத்திய அரசு உதவியது. ’அம்பேத்கர்’ திரைப்படத்திற்கு மத்திய அரசும், மகாராஷ்டிரா அரசும் இணைந்து சுமார் 18 கோடி ரூபாய் நிதியுதவி அளித்தன. தமிழக அரசு ஏற்கனவே ‘பெரியார்’ திரைப்படத்திற்கு நிதியுதவி வழங்கிப் பெருமை சேர்த்துள்ளது.
முதலமைச்சர் விஜய்க்கு வைக்கப்பட்ட கோரிக்கை
முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் பெருந்தலைவர் காமராஜரைத் தனது முதன்மையான அரசியல் வழிகாட்டிகளில் ஒருவராக ஏற்றிப்போற்றி வருவதால், தற்போதைய தவெக அரசு தனக்கு நிச்சயம் உதவும் என்ற புதிய நம்பிக்கை பிறந்துள்ளதாக பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். எனவே, நாட்டின் நலனுக்காகவும், இளைய தலைமுறையின் விழிப்புணர்விற்காகவும் தயாரிக்கப்பட்ட ‘காமராஜ்’ திரைப்படத்தைத் தமிழக அரசு முறைப்படி நாட்டுடைமையாக்கி, உலகத் தமிழர்களுக்கு அதனைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும்; அதற்கு ஈவுத் தொகையாக (Royalty) ரூ.2 கோடி (இரண்டு கோடி ரூபாய்) வழங்கித் தனது கடன் சுமையைத் தீர்க்க முதலமைச்சர் முன்வர வேண்டும் என்றும் அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார். பெருந்தலைவர் காமராஜரின் மீது அளவற்ற பற்றுகொண்ட முதலமைச்சர் விஜய், ஒரு மூத்த கலைஞனின் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்று அத்திரைப்படத்தை நாட்டுடைமையாக்குவாரா என்ற எதிர்பார்ப்பு கோலிவுட் மற்றும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
