HomeBreaking News"தேர்தல் வெற்றித் தோல்விகளால் விசிக ஒருபோதும் பின்னடைவைச் சந்திக்காது; நான் தலைவர்களை உருவாக்குகிறேன்!" – திருமாவளவன்...

“தேர்தல் வெற்றித் தோல்விகளால் விசிக ஒருபோதும் பின்னடைவைச் சந்திக்காது; நான் தலைவர்களை உருவாக்குகிறேன்!” – திருமாவளவன் அதிரடி பேச்சு!

-

- Advertisement -

“விடுதலைச் சேர்க்கைகள் கட்சி என்பது தேர்தல் வெற்றி அல்லது தோல்விகளால் பின்னடைவைச் சந்திக்கும் ஒரு சாதாரணக் கட்சி அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் போராடும் ஒரு பேரியக்கம். அதனால்தான், நான் வெறும் தொண்டர்களை வளர்க்காமல், கொள்கை ரீதியான தலைவர்களை உருவாக்குகிறேன் என்று திரும்பத் திரும்பக் கூறி வருகிறேன்” என விசிக தலைவர் தொல். திருமாவளவன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன்

we-r-hiring

திருவாரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விசிக மாநில மருத்துவரணி செயலாளர் சேகர் (எ) தாமரையாரின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு, மணமக்களுக்குத் தாலி எடுத்துக் கொடுத்துத் திருமணத்தை நடத்தி வைத்த பின் அவர் ஆற்றிய உரையின் விரிவான தொகுப்பு இதோ:

​”2 சீட்டு அரசியல் விமர்சனமும், அதன் நிஜமான அதிகாரமும்”

​அண்மைய அரசியல் நகர்வுகள் மற்றும் விசிக பெற்றுள்ள அமைச்சர் பதவிகள் குறித்து எழும் காழ்ப்புணர்ச்சி விமர்சனங்களுக்குத் திருமாவளவன் தனது பாணியில் பதிலடி கொடுத்தார்: “மது அருந்துபவனுக்குத் தற்காலிக மகிழ்ச்சி இருந்தாலும், இந்தச் சமூகம் நம்மை எளிதாக ஏற்றுக்கொள்ளாது என்ற ஒரு குற்ற உணர்வு அவனுக்குள் இருக்கும். அதைப்போலத்தான் சிலர் நம்மைப் பார்த்து ‘இரண்டு சீட்டுகளை வைத்துக் கொண்டு இவ்வளவு ஆட்டமா?’ எனக் கேட்கிறார்கள். ஆனால், அந்த இரண்டு சீட்டுகள் இல்லாமல் அவர்களால் ஆட்சி அமைக்க முடியாமல் தவித்தார்கள் என்பது அந்த விமர்சகர்களுக்குத் தெரியவில்லை.

ஆட்சி அமைப்பதற்கு அந்த இரண்டு சீட்டுகளின் ஆதரவு மிக அவசியத் தேவையாக இருந்தது. அதனால்தான் அந்த இரண்டு இடங்கள் இன்று அரசியலில் பெரும் முக்கியத்துவம் பெறுகின்றன. இரண்டு இடங்களில் வென்று அமைச்சர் பதவிகளைப் பெற்றுவிட்டோம் என்று காழ்ப்புணர்ச்சியோடு பேசுகிறார்கள். ஆனால், இரண்டு இடங்களில் ஜெயித்ததை நாம் ஒரு மாபெரும் சாதனையாக ஒருபோதும் கருதவில்லை.”

​”ஆட்சி மாறினாலும் சமூகத் தீமைகள் உடனே மாறாது”

​சாதிய வன்கொடுமைகள் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்துப் பேசிய அவர், “இந்த இரண்டு சீட்டுகளால் மட்டும் ஒடுக்கப்பட்ட மக்கள் முழுமையாக விடுதலை பெற்றுவிடப் போவதில்லை; சாதிய வன்கொடுமைகளும் உடனே நின்றுவிடப் போவதில்லை. ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் கூட இது போன்ற வன்கொடுமைகள் தொடரத்தான் செய்யும். அதற்கு ஆட்சியில் இருப்பவர்கள் மட்டுமே முழுப் பொறுப்பாகிவிட முடியாது.

முன்னாள் திமுக ஆட்சியாக இருந்தாலும் சரி, தற்போதைய தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆட்சியாக இருந்தாலும் சரி, ஏன்… நாளை விசிக-வே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தாலும் சரி, இந்தச் சமூகத் தீமைகள் உடனே ஒழிந்துவிடாது. நான் எதார்த்தத்தைப் பேசுவதைக் கேட்டுவிட்டு, சிலர் என்னை ‘ஆட்சிக்கு வக்காலத்து வாங்குகிறார்’, ‘திமுகவின் சொம்பு’, ‘முட்டுக் கொடுக்கிறார்’ என்றெல்லாம் விமர்சித்தார்கள். யார் ஆட்சியில் இருந்தாலும் இதுதான் உண்மை நிலை” என்றார்.

​”அரசியல் முரண்பாடுகளும், மானுட உறவும்”

​கூட்டணி மற்றும் கொள்கை அரசியல் குறித்து விளக்கிய திருமாவளவன்: “ஒரு அணியில் சேர்ந்துவிட்டால் இன்னொரு அணியோடு நட்பே பாராட்டக் கூடாது, அப்படிப் பேசினால் அது துரோகம், நம்பிக்கைத் துரோகம் என்று சிலர் அரசியல் பேசுகிறார்கள். விசிக இடதுசாரி அரசியலை முன்னெடுக்கும் கட்சி. கம்யூனிஸ்டுகளும் நாமும் கொள்கை அளவில் ஒன்றுதான் என்றாலும், ஒரு பிரச்சினையை அணுகும் முறையில் வேறுபாடுகளும், முரண்பாடுகளும் இருக்கவே செய்யும்.

ஒரே கொள்கையைக் கொண்ட திமுகவும் அதிமுகவும் கூட நடைமுறை அரசியலில், அதிகாரப் பகிர்வில் மாறுபட்டு ஒன்றையொன்று பகைத்துக் கொள்கின்றன. கொள்கை அளவில் செயல்படும் போது கட்சிகளுக்கு இடையே மோதல்களும், செயல்முறை வேறுபாடுகளும் வருவது இயற்கை. அவற்றை உணர்ந்து கையாள்வதுதான் முதிர்ச்சியான அரசியல். இணைந்து செயல்பட வேண்டிய இடத்தில் இணைந்தும், விலகி நிற்க வேண்டிய இடத்தில் விலகியும் நிற்க வேண்டும். அதே நேரத்தில், மனிதர்களுக்கு இடையேயான மானுட உறவைப் பேணிப் பாதுகாப்பது மிக முக்கியம்” என்று தனது உரையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார்.

MUST READ