இன்று முதல் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் அனைத்து காட்சிகளும் தமிழ்நாட்டில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள கேரளா ஸ்டோரி. இந்தப் படத்தில் கேரளாவைச் சேர்ந்த பெண்கள் முஸ்லிமாக மதம் மாற்றம் செய்யப்பட்டு ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு உதவ அனுப்பப்படுவதாக கதைகளம் அமைக்கப்பட்டது.

இந்தப் படத்தை தமிழகத்தில் வெளியிட வேண்டாம் என்று உளவுத்துறை தமிழக அரசுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் படம் தமிழகத்தில் வெளியாக அனுமதிக்கப்பட்டுள்ளது. படம் வெளியாகும் திரையரங்குகளில் எல்லாம் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 5ஆம் தேதி சென்னையில் உள்ள 13 மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில் மட்டும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியானது. படத்திற்கு எதிராக பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின.
இந்நிலையில் படத்திற்கு பொதுமக்கள் தரப்பிலிருந்து போதிய வரவேற்பு இல்லாததாலும், சட்டம் ஒழுங்கில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதாலும் இன்று (மே 07) முதல் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும், இனி இப்படம் திரையிடப்படாது என்றும் மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்துள்ளன.