நீட் (NEET) வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து நாடு முழுவதும் மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டங்கள், ஒரு தேர்வின் நம்பகத்தன்மை சீர்குலைந்ததற்கான எதிர்வினை மட்டுமல்ல; தகுதி அடிப்படையிலானது என முன்னிறுத்தப்பட்ட ஓர் அமைப்பின் மீதான ஆழமான நம்பிக்கையிழப்பையே வெளிப்படுத்துகின்றன என்று திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு விவகாரம், கூட்டாட்சித் தத்துவம் மற்றும் கல்வித் தரம் குறித்து அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் கூறியிருப்பதாவது.

எச்சரிக்கை விடுத்த முதல் மாநிலம் தமிழ்நாடு
நீட்டுக்கு எதிராக முதன்முதலில் எச்சரிக்கைக் குரல் எழுப்பிய மாநிலம் தமிழ்நாடுதான். மருத்துவம் படிக்க விரும்பும் ஒவ்வொரு மாணவரின் எதிர்காலத்தையும் ஒரே ஒரு தேசிய நுழைவுத் தேர்வில் பணயம் வைத்துத் தீர்மானிக்க வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையையே நாங்கள் கேள்விக்குட்படுத்தினோம். அண்மைய நிகழ்வுகள் எங்கள் கவலை முற்றிலும் நியாயமானது என்பதையே உறுதிப்படுத்தியுள்ளன.
நீட்டை அறிமுகப்படுத்தியபோது ஒன்றிய அரசு அளித்த 3 முக்கிய வாக்குறுதிகள்
- பல நுழைவுத் தேர்வுகளை எழுதும் சுமை குறையும்.
- கேப்பிடேஷன் கட்டணம் மற்றும் வணிகமயமாக்கல் ஒழியும்.
- தகுதியானவர்கள் மட்டுமே சேர்ந்து மருத்துவக் கல்வித் தரம் உயரும்.
ஆனால், இந்த 3 வாக்குறுதிகளிலுமே நீட் அமைப்பு முற்றிலுமாகத் தோல்வியடைந்துவிட்டது.

கோச்சிங் சென்டர் கலாச்சாரமும் சமத்துவமின்மையும்
சமத்துவத்தைக் கொண்டுவருவதற்குப் பதிலாக, கற்றலின் மையத்தைப் பள்ளிக்கூடங்களிலிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ‘பயிற்சி மையங்களுக்கு’ நீட் மாற்றிவிட்டது. இன்று தகுதி என்பது பள்ளிக் கல்விச் செயல்திறனால் தீர்மானிக்கப்படுவதில்லை; பயிற்சி மையங்கள் கற்பிக்கும் தேர்வு உத்திகளை எவ்வளவு திறம்பட ஒரு மாணவர் கற்றுக்கொண்டுள்ளார் என்பதன் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது.
இதன் பயனை வசதிபடைத்தவர்கள் அனுபவிக்கும் வேளையில், கிராமப்புற மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், மாநிலப் பாடத்திட்டம் மற்றும் தாய்மொழி வழியில் பயிலும் மாணவர்கள் கடுமையாகப் பின்னடைவைச் சந்திக்கின்றனர். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகள் ஒற்றைத் தேர்வை நம்பியிருக்காமல், பள்ளிக் கல்வி மதிப்பெண்கள் மற்றும் ஒட்டுமொத்தத் திறனை மதிப்பீடு செய்யும் முறைகளையே பின்பற்றுகின்றன.
போலி ‘தகுதி’ வாதமும் தொடரும் வணிகமயமாக்கலும்
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் தகுதிக்கான பெர்சென்டைல் பலமுறை பூஜ்ஜியமாகவும், சில நேரங்களில் பூஜ்ஜியத்துக்கும் குறைவாகவும் குறைக்கப்பட்டது. ஏழை மாணவர்கள் அரசு இடங்களுக்குக் கடுமையான போட்டியை எதிர்கொள்ளும்போது, வசதி படைத்தவர்கள் தளர்வான தகுதி அளவுகோல்களிலேயே தனியார் மருத்துவக் கல்வியைப் பெற முடிகிறது. இது தகுதியை முன்னிறுத்துவது அல்ல; வசதி படைத்தவர்களின் ஆதிக்கத்தை அமைப்புரீதியாக நிலைநிறுத்தும் முறையாகும். முன்பு நேரடியாகக் கேட்கப்பட்ட கேப்பிடேஷன் கட்டணத்தின் இடத்தை இன்று பயிற்சி மையக் கட்டணங்களும், தனியார் பல்கலைக்கழகங்களின் பல மடங்கு உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணங்களும் பிடித்துள்ளன.

ஏ.கே.ராஜன் குழுவும், முடக்கப்பட்ட மசோதாவும்
ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு, நீட் மருத்துவக் கல்வித் தரத்தை மேம்படுத்தவும் இல்லை, சமூகநீதியை உறுதிப்படுத்தவும் இல்லை என்ற தெளிவான முடிவுக்கு வந்தது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டும், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்தார். ஒன்றிய அரசும் மாநிலத்தின் கவலைகளை ஆக்கப்பூர்வமாக அணுகவில்லை. மருத்துவக் கல்லூரிகளை நிறுவவும், நிதியளிக்கவும் மாநிலங்களை நம்பும் ஒன்றிய அரசு, மாணவர் சேர்க்கையைத் தீர்மானிக்கும் அதிகாரத்திலும் மாநிலங்களைத்தான் நம்ப வேண்டும்.
அகில இந்திய ஒதுக்கீடும் கூட்டாட்சித் தத்துவமும்
மாநிலங்களின் நிதியில் உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி இடங்களில் ஒரு பகுதியை மத்தியத் தொகுப்பிற்கு மாற்றும் அகில இந்திய ஒதுக்கீடு (AIQ) முறை கூட்டாட்சித் தத்துவம் மற்றும் சமூகநீதியைப் பலவீனப்படுத்துகிறது. குறிப்பாக, முதுநிலை மருத்துவப் படிப்புக்காக வேறு மாநிலங்களுக்குச் செல்லத் தயங்கும் பெண் மாணவிகளை இது கடுமையாகப் பாதிக்கிறது.
ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை
ஒற்றைத்துவத்தையே இறுதி இலக்காகக் கருதும் மனப்போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். இந்தியாவுக்குத் தேவை அதிகாரக் குவிப்பு அல்ல; மாநிலங்கள், மாநில அரசுப் பள்ளிகள் மற்றும் மாணவர்கள் மீது வைக்கும் நம்பிக்கைதான். நீட்டிலிருந்து விலக்கு கோரும் மாநிலங்களுக்கு அந்த உரிமை வழங்கப்பட வேண்டும். மருத்துவக் கல்வியின் எதிர்காலம் நியாயமான, கூட்டாட்சித் தத்துவத்தை மதிக்கும் அணுகுமுறையையே கோருகிறது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
கொந்தளிப்பில் மாணவர்கள்!: நாளை தமிழகம் தழுவிய வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் அறிவிப்பு!
