Homeசெய்திகள்சென்னை"நீட் போராட்டத்திற்குத் தடையா? ஜனநாயகன் படத்திற்குப் பாதுகாப்பா?" – தவெக அரசை வெளுத்து வாங்கிய மாணவர்...

“நீட் போராட்டத்திற்குத் தடையா? ஜனநாயகன் படத்திற்குப் பாதுகாப்பா?” – தவெக அரசை வெளுத்து வாங்கிய மாணவர் அமைப்புகள்!

-

- Advertisement -

“ஜனநாயகப் பூமி என்று பேசிக்கொண்டே, உரிமைக்காகக் குரல் கொடுக்கும் மாணவர்களின் போராட்டத்தை நசுக்குவதா?” – தவெக (TVK) தலைமையிலான அரசுக்கு எதிராகச் சென்னையில் மாணவர்கள் நடத்திய அதிரடிப் போராட்டம் அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

தவெக

we-r-hiring

நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்யக் கோரியும், தொடர் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் தீவிரமடைந்து வரும் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக, தமிழகத்திலும் போராட்டக் களம் சூட பிடித்துள்ளது.

சின்னமலையில் திரண்ட மாணவர் சக்தி!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) மற்றும் இந்திய மாணவர் சம்மேளனம் (SFI) ஆகியவை இணைந்து, சென்னை சைதாப்பேட்டை சின்னமலை பகுதியில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

நூற்றுக்கணக்கான மாணவர்கள் திரண்டு, பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசுக்கு எதிராகக் காரசாரமான முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, ஆளுநர் மாளிகையை (ராஜ் பவன்) நோக்கி அமைதிப் பேரணியாகச் செல்ல முயன்ற மாணவர்களைக் காவல்துறை தடுத்து நிறுத்தியது. பேரணிக்கு அனுமதி மறுத்த தவெக அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்துப் போராட்டக்காரர்கள் கொந்தளித்தனர்.

“மாணவர் கைகளைக் கடித்த காவல்துறை”: திடுக்கிடும் குற்றச்சாட்டு!

போராட்டத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் கார்த்திக், காவல்துறையின் அராஜகப் போக்கை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார்:

“உரிமைக்காகப் போராடிய மாணவர்களைக் கலைக்கிறோம் என்ற பெயரில், காவல்துறையினர் கொடூரமாக நடந்து கொண்டுள்ளனர். சில மாணவர்களின் கைகளைக் காவல்துறையினரே கடித்ததில், காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது என்ன மாதிரியான ஜனநாயக நிர்வாகம்?”

மாணவர் அமைப்புகளின் ‘அதிரடி’ கோரிக்கைப்பட்டியல்:

  1. நீட் தேர்வு ரத்து: மாணவர்களின் உயிரைப் பறிக்கும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

  2. அமைச்சர் ராஜினாமா: முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.

  3. காவல்துறை மீது நடவடிக்கை: மாணவர்கள் மீது வன்முறையைப் பிரயோகித்த காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

  4. இழப்பீடு: நீட் தேர்வு குளறுபடிகளால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.

  5. பொய் வழக்குகள் ரத்து: அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.

இக்கோரிக்கைகள் தொடர்பாகத் தமிழ்நாட்டின் முதலமைச்சரை நேரில் சந்தித்து முறைப்படி மனு அளிக்கவுள்ளதாகவும் மாணவர் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

காரசார விவாதம்: ‘ஜனநாயகன்’ படத்திற்குப் பாதுகாப்பு… ஜனநாயகக் கடமைக்குத் தடையா?

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்து மாணவர் அமைப்பினர் முன்வைத்த கேள்விகள் ஆளும் தரப்பை நிலைகுலைய வைத்துள்ளன:

“நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மாணவர் உரிமைகளுக்காகப் போராடுவது எங்கள் ‘ஜனநாயகக் கடமை’. அந்த ஜனநாயகக் கடமையைத் தடுப்பதிலேயே தீவிரமாக இருக்கும் காவல்துறை, திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு மட்டும் முழுப் பாதுகாப்பு அளிப்பது எந்த வகையில் நியாயம்? இது மிகுந்த வேதனை அளிக்கிறது!”

அரசியல் களத்திற்கு வந்து ஆட்சியமைத்துள்ள புதிய அரசு, திரையுலகக் கொண்டாட்டங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பொதுமக்களின் மற்றும் மாணவர்களின் கோரிக்கைகளுக்குக் கொடுக்கத் தவறிவிட்டதோ என்ற காரசாரமான விவாதம் தற்போது பொதுவெளியில் வெடித்துள்ளது!

சென்னை காசிமேட்டில் ‘சாகர் காவாச்’ ஒத்திகை: சந்தேகத்திற்கிடமான விசைப்படகுடன் 5 பேர் பிடிபட்டதால் பரபரப்பு!

MUST READ