சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ரயில் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யவும், நெரிசலைக் குறைக்கவும் தெற்கு ரயில்வே பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளைச் செய்து வருகிறது.


தன் ஒருபகுதியாக, சென்னை – அரக்கோணம் இடையே 68 கிலோமீட்டர் தொலைவுக்கு 5 மற்றும் 6ஆவது புதிய ரயில் பாதைகள் அமைப்பதற்கான இறுதிகட்ட ஆய்வுக்கும் (Final Location Survey), அதில் முதற்கட்டமாக பெரம்பூர் – அம்பத்தூர் இடையே ரூ.182 கோடியில் புதிய பாதைகள் அமைக்கவும் ரயில்வே வாரியம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.
பெரம்பூர் – அம்பத்தூர் இடையே ரூ.182 கோடியில் புதிய பாதைகள்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏற்படும் கடும் நெரிசலைக் குறைக்கும் வகையில், பெரம்பூர் ரயில் நிலையத்தை சென்னை நகரத்தின் 4ஆவது புதிய ரயில் முனையமாக (4th Railway Terminal) மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, பெரம்பூர் முதல் அம்பத்தூர் வரையிலான 6.4 கிலோமீட்டர் தூரத்திற்கு 5 மற்றும் 6ஆவது புதிய பாதைகளை ரூ.182 கோடி மதிப்பீட்டில் அமைக்கத் தெற்கு ரயில்வே திட்டமிட்டு அனுமதி பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பெரம்பூர் முனையத்திலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குத் தடையின்றி கூடுதல் ரயில்களை இயக்க முடியும்.
68 கி.மீ தொலைவுக்கு விரிவாக்கம்: இறுதிகட்ட சர்வேக்கு அனுமதி
பெரம்பூர் – அம்பத்தூர் பாதையைத் தொடர்ந்து, இந்த 5 மற்றும் 6ஆவது ரயில் பாதைகளைச் சென்னை சென்ட்ரல் – திருவள்ளூர் – அரக்கோணம் வரை முழுமையாக 68 கி.மீ. தொலைவுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முக்கிய பெருநகர வழித்தடத்தின் மொத்த நீளத்திற்கும் புதிய பாதைகளை அமைப்பதற்காக விரிவான பொறியியல் மற்றும் நில அளவை (Final Location Survey) பணிகளை மேற்கொள்வதற்கு ரயில்வே வாரியம் தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளது.
பயணிகளுக்குக் கிடைக்கவுள்ள முக்கிய நன்மைகள்:
கூடுதல் புறநகர் ரயில்கள்: சென்னை – திருவள்ளூர் – அரக்கோணம் வழித்தடத்தில் நெரிசல் குறைந்து, கூடுதல் புறநகர் மின்சார ரயில்களை (Suburban Trains) இயக்க வழிவகுக்கும்.
விரைவு ரயில்களின் தாமதம் தவிர்க்கப்படும்: எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்களுக்குத் தனிப்பாதைகள் கிடைப்பதால், புறநகர் ரயில்கள் வழியில் நிறுத்தப்பட்டுத் தாமதமாவது முற்றிலுமாகத் தவிர்க்கப்படும்.
சென்ட்ரல் நெரிசல் குறையும்: பெரம்பூர் முனைய பயன்பாட்டிற்கு வரும்போது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பயணிகள் கூட்டம் கணிசமாகக் குறையும்.
அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரப் பார்வை:
மத்திய ரயில்வே அமைச்சகம் சென்னை புறநகர் ரயில் அமைப்பை நவீனமயமாக்கத் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த 5 மற்றும் 6ஆவது ரயில் பாதை திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டால், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தினசரி பயணிகள் மற்றும் அலுவலகவாதிகள் பெரிதும் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
