டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தியும் 30 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) நிறுவனர் அபிஜீத் திப்கேவுக்கு டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடல்நலக் குறைவு குறித்து பதிவு
கடந்த சில நாட்களாகக் கடும் காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அபிஜீத் திப்கே, இதுகுறித்துத் தெரிவிக்கையில், “கடந்த சில நாட்களாக எனக்கு உடல்நலம் சரியில்லை. தற்போது மேற்கொள்ளப்பட்ட ரத்தப் பரிசோதனை முடிவில் எனக்கு டைபாய்டு பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

தொடரும் போராட்டம்
டெல்லியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஒருங்கிணைத்து ஜந்தர் மந்தர் பகுதியில் CJP அமைப்பினர் தொடர்ந்து களத்தில் நின்று போராடி வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள், மத்திய அரசுக்கு எதிராகத் தங்களது கோஷங்களை எழுப்பி வருகின்றனர். அபிஜீத் திப்கேவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ள போதிலும், மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை மற்றும் போராட்டக் களத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் திட்டமிட்டபடி தொடரும் என CJP செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா விவகாரத்தில் அரசு “ஆம் அல்லது இல்லை” என்ற தெளிவான முடிவை அறிவிக்கும் வரை மாணவர்களின் இந்த அறப்போராட்டம் ஓயாது என்றும் போராட்டக் களத்திலிருக்கும் மாணவர்கள் உறுதியளித்துள்ளனர்.
