Homeசெய்திகள்மாவட்டம்நெல்லையில் அதிர்ச்சி: ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்தால் 6 வாரத்தில் இரட்டிப்பு எனக்கூறி ரூ.1.78...

நெல்லையில் அதிர்ச்சி: ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்தால் 6 வாரத்தில் இரட்டிப்பு எனக்கூறி ரூ.1.78 கோடி மோசடி செய்த இருவர் கைது!

-

- Advertisement -

ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்தால் 6 வாரங்களில் பணம் இரட்டிப்பாகக் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி, படித்த பெண்கள் உட்பட பலரிடம் ரூ.1.78 கோடி மோசடி செய்த வழக்கில் மதுரையைச் சேர்ந்த இருவரை நெல்லை மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆன்லைன் வர்த்தகத்தில்

we-r-hiring

வழக்கின் பின்னணி:

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமேரி (34). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் நெல்லை பேட்டை கருங்காடு ரோடு பகுதியைச் சார்ந்த சந்திரசேகர் என்பவருக்கும் ஆன்லைன் மூலமாகப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனைப் பயன்படுத்தி, சந்திரசேகரும் அவரது தோழியான மதுரை பொதும்பு பகுதியைச் சேர்ந்த சரண்யாவும் செல்வமேரியைத் தொடர்பு கொண்டுள்ளனர். ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 6 வாரங்களில் ரூ.50,000 லாபத்துடன் மொத்தம் ஒன்றரை லட்சமாகத் திருப்பிக் கொடுக்கப்படும் என்று அவர்கள் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

நேரில் வழங்கப்பட்ட பணம்:

இதை நம்பிய செல்வமேரி, கடந்த 2025-ஆம் ஆண்டு முதல் சந்திரசேகரின் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு முறையும் புதுக்கோட்டையிலிருந்து பேருந்து மூலமாக மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்குச் சென்றுள்ளார். “ஆன்லைனில் பணம் அனுப்பினால் வருமான வரித் துறை சிக்கல் வரும்” என்று மோசடி கும்பல் கூறியதை நம்பி, மதுரையைச் சேர்ந்த அருண்குமார் மற்றும் சரண்யா ஆகியோரிடம் செல்வமேரி நேரில் பணத்தைக் கொடுத்து வந்துள்ளார்.

தொடக்கத்தில் சில வாரங்கள் நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதற்காக, லாபத் தொகையிலிருந்து சிறிதளவு பணத்தை அருண்குமாரும் சரண்யாவும் புதுக்கோட்டைக்கே நேரில் சென்று செல்வமேரியிடம் கொடுத்துள்ளனர்.

நகை அடகு வைத்து ரூ. 1.07 கோடி இழப்பு:

அவர்கள் மீது ஏற்பட்ட முழு நம்பிக்கையின் காரணமாக, செல்வமேரி தனது வீட்டில் இருந்த நகைகள் மற்றும் இதர பொருட்களை அடகு வைத்து, மொத்தமாக ரூ. 1,07,80,000 (ஒரு கோடியே ஏழு லட்சத்து எண்பதாயிரம்) வரை ஆன்லைன் வர்த்தக முதலீட்டுக்காக அருண்குமார் மற்றும் சரண்யாவிடம் வழங்கியுள்ளார்.

ஆனால், மூன்று மாதங்கள் கடந்தும் முதலீட்டுத் தொகையோ அல்லது லாபப் பணமோ வழங்கப்படாததால் சந்தேகம் அடைந்த செல்வமேரி அவர்களைத் தொடர்புகொண்டுள்ளார். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துவிட்டுத் தங்களது அலைபேசிகளை அணைத்துவிட்டனர்.

காவல்துறையின் அதிரடி விசாரணை:

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செல்வமேரி, இதுகுறித்து நெல்லை மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், இந்த மோசடி கும்பல் விழுப்புரம், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் படித்த பல பெண்களைக் குறிவைத்து, ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.1.78 கோடி வரை சுருட்டியது வெளிச்சத்திற்கு வந்தது.

இந்தச் மோசடியில் தொடர்புடைய மதுரையைச் சேர்ந்த அருண்குமார் மற்றும் ஆனந்தகுமார் ஆகிய இருவரை நெல்லை மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள சந்திரசேகர் மற்றும் சரண்யா ஆகியோரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

குறைந்த முதலீட்டில் குறுகிய காலத்தில் கோடி கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் பொதுமக்கள் இதுபோன்ற ஆன்லைன் மோசடி வலைகளில் சிக்கி ஏமாற வேண்டாம் என்று காவல்துறையினர் மீண்டும் எச்சரித்துள்ளனர்.

MUST READ