அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடலைக் கட்டாயமாக்கிய ஒன்றிய அரசின் நடவடிக்கை, அரசியலமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கு எதிரானது என்று அரசியலமைப்பு சட்டப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் செய்தியாளர்களைச் சந்தித்த உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்த முக்கிய விவரங்கள்:


முதல் இரு பத்திகளில் சிக்கல் இல்லை:
வந்தே மாதரத்தின் முதல் இரண்டு பத்திகளைப் பாடுவதில் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், மற்ற நான்கு பத்திகளும் இந்து மதக் கடவுள்களைப் புகழ்ந்து பாடுவதாக அமைந்துள்ளன. நாத்திகர்களும், பிற மதங்களைச் பின்பற்றும் சிறுபான்மை மக்களும் இதனைப் பாட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது ஏற்புடையதல்ல.
அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதம்:
வந்தே மாதரத்தின் கடைசி நான்கு பத்திகள் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமானவை. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ‘தேசியப் பாடல்’ அல்லது ‘வந்தே மாதரம்’ என்ற சொற்களே கிடையாது. இது இந்திய நாட்டைப் பற்றிய பாடல் அல்ல, மாறாக ஒருங்கிணைந்த வங்காள தேசத்தைப் பற்றிய பாடலாகும்.
தேசிய கீதத்திற்கே கட்டாயம் இல்லை:
தேசியக் கீதத்தைக் கூட கட்டாயமாகப் பாட வேண்டும் என்ற சட்டம் இல்லை; தேசியக் கீதம் ஒலிக்கப்படும் போது எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது.
பங்கிம் சந்திரர் பின்னணி மற்றும் பாரதியார் பாடல்:
வந்தே மாதரத்தை இயற்றிய பங்கிம் சந்திர சாட்டர்ஜிக்கும், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கும் எந்தக் சம்பந்தமும் கிடையாது. 1858-ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் நியமிக்கப்பட்ட முதல் துணை ஆட்சியரான அவர், பிரிட்டிஷ் ஆட்சியில் ‘ராவ் பகதூர்’ பட்டமும் பெற்றுள்ளார். அதற்குப் பதிலாக, சாதி-மதம் ஒழிய வேண்டும் மற்றும் 30 கோடி மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று மகாகவி பாரதியார் எழுதிய பாடலை தேசியப் பாடலாக அறிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
துணைவேந்தர் செயலுக்குக் கண்டனம்:
சட்டமன்றத்தில் கூட தேசிய கீதமும் வந்தே மாதரமும் பாட வேண்டிய அவசியம் கிடையாது என்றார். மேலும், தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் செயல் அயோக்கியத்தனமானது என்றும் அரி பரந்தாமன் காட்டமாகத் தெரிவித்தார்.
