சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பான ‘அசுர்லைன்’ (Azureline)-ல் வசித்து வரும் பிரபல தொழிலதிபர் பி.ஆர். சுந்தர் மீது, தனியார் செய்தி சேனல் பெண் செய்தி வாசிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் ஐஸ் ஹவுஸ் காவல் நிலையக் காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம், குற்றவியல் மிரட்டல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் வணிக மற்றும் ஊடக வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


புகாரின் பின்னணி விவரம்:
தனியார் செய்தி ஊடகத்தில் செய்தி வாசிப்பாளராகப் பணிபுரியும் இளம் பெண் ஒருவர், வேலைவாய்ப்பு நிமித்தம் தொழிலதிபர் பி.ஆர். சுந்தரை நாடியதாகவும், அதன் மூலம் ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில் சுந்தர் தன்னைத் தனது வீட்டிற்கு வரவழைத்து அநாகரிகமாக நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பி.ஆர். சுந்தரின் மனைவியிடம் அப்பெண் புகார் அளித்தும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
அறையில் பூட்டி வைத்து மிரட்டல் – காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்:
இதற்கிடையே, கடந்த ஜூன் 29, 2026 அன்று நடைபெற்ற சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறி, பி.ஆர். சுந்தர் அப்பெண்ணைத் தனது அலுவலகத்திற்கு வரவழைத்துள்ளார். அங்கு சுமார் மூன்று மணி நேரம் அறையில் பூட்டி வைத்து பாலியல் தொல்லை அளித்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் புகார் அளித்தார்.
மனைவர் மீதும் வழக்கு:
காவல் ஆணையர் அலுவலக உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொண்ட ஐஸ் ஹவுஸ் போலீசார், தொழிலதிபர் பி.ஆர். சுந்தர் மீது பாலியல் தொல்லை அளித்தல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், குற்றவியல் மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் தனது கணவருக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் பி.ஆர். சுந்தரின் மனைவி மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
