சேலத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவை ஒட்டி, கோவில் பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் தற்காலிகக் கடைகள் அமைக்கும் சிறு வியாபாரிகளிடம் தவெகவினர் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் மாமூல் வசூலிப்பதாக எழுந்துள்ள புகார்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் நேரடித் துணையோடு இந்தக் கொள்ளை அரங்கேறி வருவதாகச் சிறு வியாபாரிகள் கண்ணீருடன் குமுறுகின்றனர்.
ஆடித் திருவிழாவும்… பாரம்பரிய வண்டி வேடிக்கையும்!
ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சேலம் கோட்டை மாரியம்மன், குகை மாரியம்மன் உள்ளிட்ட முக்கிய மாரியம்மன் கோவில்களில் சுமார் 20 நாட்களுக்குத் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். குறிப்பாக, குகை ஸ்ரீ மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி நடைபெறும் தீமிதி திருவிழா மற்றும் தமிழகத்தில் எங்குமில்லாத வினோத நிகழ்வான ‘வண்டி வேடிக்கை’ மிகவும் பிரசிபெற்றது.

தலைமுறை தலைமுறையாக சுமார் 75 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் இந்த வண்டி வேடிக்கை விழாவைக் காணத் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் வசிக்கும் சேலத்தைச் சேர்ந்தவர்களும் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து கண்டு ரசிப்பது வழக்கம். இந்த நிகழ்ச்சியைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் திரளுவதால், குகை கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், திருச்சி பிரதான சாலையிலும் ஏராளமான தற்காலிகச் சாலையோரக் கடைகள் அமைக்கப்படும். பொம்மைகள், பலூன்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை தங்களது கடைகளை நடத்தி வருவர்.
டெண்டர் முறைகேடும்… தவெகவினரின் வசூல் வேட்டையும்!
வழக்கமாக இத்தகைய கடைகளுக்குக் கோவில் நிர்வாகத்தின் சார்பில் முறையான டெண்டர் விடப்பட்டு, அதன் மூலமே கட்டணங்கள் வசூலிக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு எவ்வித முறையான டெண்டரும் விடப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தச் சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தவெகவினர், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களின் ரகசிய ஆதரவுடன் சாலையோரக் கடைகளில் லட்சக்கணக்கில் பணத்தை அட்டைப் பறிப்பு செய்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தவெகவின் குகை பகுதி செயலாளர் பாலாஜி தலைமையிலான குழுவினர், அப்பகுதியில் உள்ள சிறிய தள்ளுவண்டி கடைகள் முதல் பெரிய கடைகள் வரை கடை ஒன்றிற்கு நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை தின வாடகையாக மிரட்டி வசூல் செய்து வருவதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
“மிரட்டிப் பணம் பறிக்கிறார்கள்” – வியாபாரிகள் குமுறல்!
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் கண்ணீருடன் கூறுகையில், “கடந்த காலங்களில் இது போன்ற மோசமான நிலை எங்களது வாழ்நாளில் இருந்ததில்லை. அப்போதெல்லாம் குறைந்தபட்சமாக 100 ரூபாய் கொடுத்தாலே போதும், வியாபாரம் நடக்கும். ஆனால், தற்போது ஆளுங்கட்சியான தவெகவைச் சேர்ந்தவர்கள் எங்கள் வயித்திலடித்து, மிரட்டி ஆயிரக்கணக்கில் தினக்கூலியாகப் பணத்தைப் பறித்துச் செல்கிறார்கள். அதிகாரிகளும் இவர்களுக்கு உடந்தையாக இருப்பது எங்களுக்கு மேலும் வேதனையை அளிக்கிறது” என்று தெரிவித்தனர்.
ஏழை எளிய சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைச் சூறையாடும் இந்தத் தவெகவினரின் முறைகேடான வசூல் வேட்டை குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கோவில்களை வகைப்படுத்த மேலும் 5 மாத அவகாசம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
