திருப்பதி ஏழுமலையான் கோவிலின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று (செப்டம்பர் 15) கோலாகலமாக தொடங்கியது. வரும் 23-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவையொட்டி, கோவில் முழுவதும் வண்ணமயமான மின்விளக்குகள் மற்றும் மலர்களால் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.


கண்ணைக் கவரும் மின் விளக்கு அலங்காரம்
பிரம்மோற்சவ விழாவையொட்டி அலிபிரி சோதனைச் சாவடியில் இருந்து கோவில் முகப்பு பகுதி வரையிலும், கோவில் வளாகம் முழுவதும் வண்ண வண்ண மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவில் விழாக்கோலம் பூண்டு காட்சியளிக்கிறது.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கோவில்
ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து டன் கணக்கில் மலர்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. கோவிலின் உள்பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
மேலும் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு பழங்களைக் கொண்டும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஸ்வக்சேனர் உலா
பிரம்மோற்சவ விழா தொடங்குவதற்கு முன்னதாக, ஏழுமலையானின் படைத்தளபதியான விஸ்வக்சேனர் நேற்று மாலை சிறப்பு அலங்காரத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்தார். விழா ஏற்பாடுகளை மேற்பார்வையிடும் வகையில் இந்த வைபவம் நடைபெற்றது.
கொடியேற்றம்
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக இன்று மாலை பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக பூமி தாய்க்கு யாகசாலையில் சிறப்பு பூஜைகளும், அங்குரார்பணம் எனப்படும் மண்ணில் விதை நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
இன்று மாலை 6.21 மணி முதல் 6.35 மணிக்குள் மீன லக்னத்தில் தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது.
ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கும் சந்திரபாபு நாயுடு
கொடியேற்றத்தை தொடர்ந்து ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தனது மனைவி புவனேஸ்வரி மற்றும் மகன் லோகேஷுடன் இணைந்து மாநில அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்கிறார்.
மேலும் தொழிலதிபர் முகேஷ் அம்பானி சார்பில் வழங்கப்பட்ட 15 மின்சார பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைக்கிறார்.
4 மாட வீதிகளில் உலா வரும் ஏழுமலையான்
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக, இரவு சிறப்பு அலங்காரத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதனை காண ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் திரண்டுள்ளனர்.
வரும் 23-ம் தேதி வரை நடைபெறும் பிரம்மோற்சவ விழாவையொட்டி திருப்பதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
கடன் தொல்லை நீங்க ஆன்மீக மற்றும் எளிய வழிமுறைகள்: நிம்மதியான வாழ்வுக்கான சிறப்புத் தொகுப்பு!
