பிரபல தொழிலதிபரும் பங்குச் சந்தை நிபுணருமான பி.ஆர்.சுந்தர் மற்றும் அவரது மனைவி மங்கையற்கரசி ஆகியோர், பெண் செய்தி வாசிப்பாளர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


புகாரின் பின்னணி
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய பெண் ஒருவர், ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது:
தொழில்முறை வேலை தொடர்பாகப் பழக்கம் ஏற்பட்ட நிலையில், பி.ஆர்.சுந்தர் தன்னைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அநாகரிகமாக நடந்து கொண்டார். இது குறித்து அவரது மனைவியிடம் புகார் தெரிவித்தபோதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும், கடந்த ஜூன் 29ஆம் தேதி நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறி, கடந்த மாதம் 1ஆம் தேதி தன்னை அலுவலகத்திற்கு வரவழைத்த பி.ஆர்.சுந்தர், சுமார் 3 மணி நேரம் அறைக்குள் அடைத்து வைத்துப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
காவல்துறையின் நடவடிக்கை
அப்பெண்ணின் புகாரின் பேரில், பி.ஆர்.சுந்தர் மீது பாலியல் தொல்லை, பெண் வன்கொடுமை, குற்றவியல் மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்தச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி மங்கையற்கரசியும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த இருவரையும் தனிப்படை போலீசார் பெங்களூருவில் கைது செய்து சென்னை அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பி.ஆர்.சுந்தர் தரப்பு மறுப்பு மற்றும் சொத்துத் தகராறு குற்றச்சாட்டுஇதற்கிடையில், தன் மீதான குற்றச்சாட்டுகளைப் பி.ஆர்.சுந்தர் தரப்பு முழுமையாக மறுத்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள தங்களுக்குச் சொந்தமான குடியிருப்பு தொடர்பான சொத்துத் தகராறின் பின்னணியிலேயே இந்தப் பொய் வழக்கு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அங்கு வசித்து வரும் காவல்துறை அதிகாரி அன்புச்செழியன் வீட்டை காலி செய்ய மறுத்ததால் சட்ட நடவடிக்கை எடுக்க முயன்றதாகவும், அதைப் பழிவாங்கும் நோக்கத்தில்தான் இந்தத் திட்டமிட்ட புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் பி.ஆர்.சுந்தர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தன் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் இந்த விவகாரத்தில் உண்மை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் என்றும் அவர் சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்தார்.
மறுபுறம், காவல் அதிகாரி அன்புச்செழியன் கூறுகையில், இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், தனது தரப்பைச் சட்டரீதியாக நிரூபிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாக்பூரில் பரபரப்பு: மாயமான 16 வயது சிறுமி மீட்பு — ஆன்லைன் நண்பரின் கொடூர முகம் அம்பலம்!
