திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அரிசி கடை நடத்தி வரும் முதியவரிடம், அரிசி வாங்குவது போல் நடித்து 4 கிராம் தங்க மோதிரத்தை நைசாக கழற்றிச் சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (73). இவர் காதர்பேட்டை பகுதி சி.என்.ஏ சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக அரிசி கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் இவரது கடைக்கு 45 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார்.
நைசாக மோதிரத்தைக் கழற்றிய மர்ம நபர் கடையில் இருந்த முதியவர் கண்ணனிடம் பல மூட்டைகள் அரிசி வாங்கப் போவதாகக் கூறி அந்த நபர் பேச்சுக்கொடுத்துள்ளார்.
அப்போது திடீரென கண்ணனின் கவனத்தை திசை திருப்பிய அவர், கண்ணன் அணிந்திருந்த 4 கிராம் தங்க மோதிரத்தை நைசாகக் கழற்றி எடுத்துக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியோடியுள்ளார்.
சிறிது நேரத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர் கண்ணன் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். இருப்பினும் அதற்குள் அந்த நபர் தப்பியோடிவிட்டார்.
போலீசார் விசாரணை
பட்டப்பகலில் மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் முதியவரிடம் மோதிரம் பறிக்கப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கண்ணன் அளித்த புகாரின் பேரில், வாணியம்பாடி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய மர்ம நபரை வலைவீசித் தேடி வருகின்றனர்.
