Homeசெய்திகள்கட்டுரை2026-27 பட்ஜெட்: "பழைய திட்டங்களின் மறுபெயரிடலே தவிர, புதிய வளர்ச்சித் திட்டம் ஏதுமில்லை" - முன்னாள்...

2026-27 பட்ஜெட்: “பழைய திட்டங்களின் மறுபெயரிடலே தவிர, புதிய வளர்ச்சித் திட்டம் ஏதுமில்லை” – முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி பாலமுருகன் விமர்சனம்!

-

- Advertisement -
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2026-27-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட், நீண்டகால தொலைநோக்குப் பார்வையின்றி உருவாக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியும், திமுக நிர்வாகியுமான பாலமுருகன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பான நேர்காணலில் அவர் முன்வைத்துள்ள முக்கியக் கருத்துகள் வருமாறு:
பாலமுருகன்
பொருளாதார இலக்கு மற்றும் கடன் சுமை
2036-க்குள் தமிழகப் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டாலராக உயர்த்தும் இலக்கு வரவேற்கத்தக்கது என்றாலும், அதை எட்டுவதற்கான திட்டமிடல் இந்த பட்ஜெட்டில் இல்லை. ஆண்டுக்கு குறைந்தபட்சம் 15% வளர்ச்சி இருந்தால்தான் இந்த இலக்கை அடைய முடியும். ஆனால், நிதிநெருக்கடியைக் காரணம் காட்டி கடன் வாங்குவதைக் குறைப்பது அல்லது அதைச் சரியாகப் பயன்படுத்தாதது பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும். கடந்த ஐந்து ஆண்டுகளில் கடன் சுமை அதிகரித்திருப்பது அரசியல் விமர்சனங்களுக்கு உட்பட்டது என்றாலும், புள்ளிவிவரங்களின்படி கடன் அவசியம் என்பதை அரசு உணர வேண்டும்.
திட்டங்களின் பெயர் மாற்றம்
“பழைய திட்டங்களுக்குப் புதிய பெயர் சூட்டியிருப்பதே இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சமாக உள்ளது” என்று பாலமுருகன் குற்றம் சாட்டியுள்ளார். கலைஞர் கனவு இல்லம் திட்டம் ‘வெற்றி வீடு’ திட்டம் என்று மாற்றப்பட்டிருப்பதை இதற்கு உதாரணமாகக் கூறுகிறார். மேலும், வேளாண்மைத் துறையில் உள்ள பல திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளதே தவிர, புதியதாக மக்கள் பயனடையும் வகையில் எந்தவிதமான ஆக்கப்பூர்வமான மாற்றங்களும் செய்யப்படவில்லை என்பது அவரது வாதம்.
கல்வித் துறைக்கான ஒதுக்கீடு
கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி கடந்த ஆண்டை விடக் குறைவு என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், “10,000 பள்ளிகளில் ‘கிளீன் கேம்பஸ்’ என்ற திட்டத்திற்காக 139 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளி ஒன்றுக்கு மாதம் 20,000 ரூபாய்க்கும் குறைவாகவே செலவிட முடியும். இந்தத் தொகையில் பள்ளி பராமரிப்பு, சிசிடிவி, பாதுகாப்பு போன்ற அனைத்தையும் எப்படிச் செய்ய முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். அரசு பள்ளிகளை நவீனப்படுத்தும் ‘பள்ளி நிறைவுத் திட்டம்’ வெறும் 1.5% பள்ளிகளுக்கு மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது, இது கல்வித் துறைக்கு அரசு அளிக்கும் முக்கியத்துவத்தைக் குறைத்து காட்டுகிறது.
மகளிர் நலத் திட்டங்கள் மற்றும் சமூகக் கொள்கை
தங்க நகை வழங்கும் திட்டங்களைப் பற்றிக் குறிப்பிட்ட பாலமுருகன், “சமூக நலத் திட்டங்கள் சந்தை நிலவரத்தைச் சார்ந்திருக்கக் கூடாது. தங்கத்தின் விலை உயரும்போது அரசுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும். மீன் பிடிப்பது எப்படி என்று கற்றுக்கொடுப்பதற்குப் பதிலாக, மீனை வழங்கும் திட்டமாக இது உள்ளது. இது முற்போக்கான பார்வை அல்ல” என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி என்பது கடந்த ஆட்சிக் காலத்தில் கட்டமைக்கப்பட்ட அடித்தளத்தின் பயனே தவிர, தற்போதைய பட்ஜெட்டில் புதியதாக எவ்வித வளர்ச்சியும் இல்லை. 2029-க்குப் பிறகு தமிழகப் பொருளாதாரம் எந்த நிலையை எட்டும் என்பது இந்த அரசு அமைக்கும் அடித்தளத்தைப் பொறுத்தே அமையும் என்று அவர் தனது நேர்காணலில் எச்சரித்துள்ளார்.

​தொகுதி மறுவரையறை: முதல்வர் விஜய் கூட்டிய அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் – பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு!

 

MUST READ