தென்னிந்திய அளவில் மிகவும் புகழ்பெற்ற ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த புதுப்பாளையம் குருநாதசாமி கோவில் ஆடிப்பெருந் தேர் திருவிழா வருகிற 12-ஆம் தேதி தொடங்கி 16-ஆம் தேதி வரை 5 நாட்கள் கோலாகலமாக நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அந்தியூர் நெடுஞ்சாலைத்துறை பயணியர் மாளிகையில் நடைபெற்றது.


கலைக்கட்டும் திருவிழா மற்றும் பிரம்மாண்ட சந்தை!
மிகவும் சிறப்பு வாய்ந்த இத்த திருவிழாவில் பங்கேற்கத் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குதிரைச் சந்தை மற்றும் கால்நடை சந்தைக்காக ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருவார்கள். இதையொட்டி சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்குத் தற்காலிகக் கடைகள், ராட்சத ராட்டினங்கள் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டு திருவிழா தற்போதே களைகட்டத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு திருவிழாவிற்கு எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்.எல்.ஏ. ஹரிபாஸ்கர் தலைமையில் விரிவான ஆலோசனைக் கூட்டம்!
விழாவிற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி. ஹரிபாஸ்கர் தலைமையில் அனைத்துத்துறை சார்ந்த அரசு அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எம்.எல்.ஏ. ஹரிபாஸ்கர் தெரிவித்த முக்கிய விவரங்கள்:
கூடுதல் வசதிகள்: பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மேலும் கூடுதலாகச் செய்யப்பட்டுள்ளன.
மருத்துவப் பாதுகாப்பு: திருவிழா நடைபெறும் நாட்களில் பக்தர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு, அதிநவீன நடமாடும் மருத்துவ வசதி, 108 ஆம்புலன்ஸ் சேவைகள் மற்றும் அவசரகால இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் வசதி ஆகியவை 24 மணி நேரமும் தடையின்றிச் செயல்படும் வகையில் முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இத்திருவிழா எவ்விதக் குறைபாடுமின்றிச் சிறப்பாக நடைபெற அனைத்துத் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து தீவிரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
