கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே வீட்டில் அமைக்கப்பட்டிருந்த குளிர்சாதனப் பெட்டிக்குள் (AC) பதுங்கியிருந்த 5 கொம்பேறி மூக்கன் பாம்புகளைத் தீயணைப்புத் துறையினர் லாவகமாகப் பிடித்து அப்புறப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏசியில் கேட்ட விசித்திர சத்தம்
திருக்கோவிலூர் அருகேயுள்ள ஒரு குடியிருப்பில், வீட்டின் அறையில் பொருத்தப்பட்டிருந்த ஏசியை இயக்கியபோது அதிலிருந்து விசித்திரமான சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், ஏசி அமைப்பை அருகில் சென்று உற்று நோக்கியபோது அதற்குள் பாம்புகள் பதுங்கியிருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்துத் திருக்கோவிலூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

லாவகமாக மீட்ட தீயணைப்புப் படையினர்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், ஏசியின் முன் பகுதியைப் பாதுகாப்பாகக் கழற்றி சோதனை செய்தனர். அப்போது ஏசியின் உட்பகுதியில் ஒரே இடத்தில் 5 கொம்பேறி மூக்கன் பாம்புகள் சுருண்டு பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தித் தீயணைப்பு வீரர்கள் ஏசிக்குள் இருந்த 5 பாம்புகளையும் ஒவ்வொன்றாக மிக லாவகமாகவும் பாதுகாப்பாகவும் வெளியே பிடித்தனர்.
அடர்ந்த காட்டுப் பகுதியில் விடுவிப்பு
பிடிபட்ட பாம்புகள் அனைத்தும் உயிருடன் மீட்கப்பட்டு, பின்னர் பாதுகாப்பான முறையில் அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு போய் விடப்பட்டன. கோடைக் காலம் மற்றும் மழைக்கால மாற்றங்களின் போது குளிர்ந்த மற்றும் இருட்டான இடங்களைத் தேடி பாம்புகள் வீடுகளுக்குள், குறிப்பாக ஏசி போன்ற மின்சாதனப் பெட்டிகளுக்குள் புகுவது அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தீயணைப்புத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
