- Advertisement -
மதுரை மாவட்டம், மேலூரில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான பிரசித்தி பெற்ற நாகம்மாள் திருக்கோவில் ஆடித்திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தி வருகின்றனர்.

விழா சிறப்புகள் மற்றும் நேர்த்திக்கடன்
மேலூர் – திருபுவனம் சாலையில் அமைந்துள்ள நாகம்மாள் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த ஆடி 1-ஆம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கிய இத்ததிருவிழாவிற்காக, சுற்றுவட்டார கிராமப் பகுதிகளைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் மேற்கொண்டு வந்தனர்.

விழாவின் முக்கிய நாளான இன்று (செவ்வாய்க்கிழமை), வேண்டுதல் நிறைவேறிய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகப் பால்குடம் ஏந்தியும், அலகு குத்தியும் கோவிலை அடைந்து அம்மனுக்கு நேர்த்திக்கடனைச் செலுத்தினர். தொடர்ந்து, மின் மோட்டார் வசதி மூலம் அம்மனுக்குச் சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்று வருகிறது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மாற்றம்
சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோவிலில் குவிந்து வருவதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு மேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், நகரின் முக்கிய வீதிகள் வழியாகப் பால்குட ஊர்வலம் சென்று வருவதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. திருவிழா ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினரும் ஊர் பொதுமக்களும் இணைந்து சிறப்பான முறையில் செய்துள்ளனர்.
