ராஜஸ்தானில் திருட்டிலிருந்து பாதுகாக்க ரூ.5 லட்சம் பணத்தை தனது வயலில் புதைத்து வைத்த விவசாயி, அந்த இடத்தை மறந்துவிட்டார். ஓராண்டுக்குப் பிறகு அந்தப் பணம் திரும்ப கிடைத்தபோது, கரையான்கள் அரித்திருந்ததால், அதைப் பயன்படுத்த முடியாமல் அவர் வேதனை அடைந்துள்ளார்.


பணத்தைப் பாதுகாக்க எடுத்த முடிவு: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனக்குச் சொந்தமான நிலத்தை சுமார் ஓராண்டுக்கு முன்பு விற்றுள்ளார். அதன்மூலம் கிடைத்த ரூ.5 லட்சம் பணத்தை வைத்து வீடு கட்ட அவர் திட்டமிட்டிருந்தார். பணம் திருடு போகலாம் அல்லது தேவையில்லாமல் செலவாகிவிடலாம் எனக் கருதிய அவர், ரூ.5 லட்சத்தையும் பாலித்தீன் பையில் வைத்து, தனது வயலில் குழி தோண்டி புதைத்து வைத்துள்ளார்.
மறதியால் ஏற்பட்ட தேடல்: மது அருந்தும் பழக்கம் மற்றும் மறதி காரணமாக, பணத்தை எந்த இடத்தில் புதைத்தார் என்பதை அந்த விவசாயி மறந்துவிட்டார். வயலில் பல்வேறு பகுதிகளில் குழிதோண்டி புதைத்த பணத்தைத் தேடியுள்ளனர். ஆனால், கிடைக்கவில்லை.
உழவு பணியின் போது கிடைத்த பை: ஓராண்டுக்குப் பிறகு வயலில் விதைப்பு பணிகளுக்காக நிலத்தை உழுதுள்ளார். அப்போது பணம் இருந்த பாலித்தீன் பை மண்ணுக்கு மேலே வந்துள்ளது. பை திறந்து பார்த்தபோது பணம் இருந்தது. ஆனால், கரையான்கள் நோட்டுகளை அரித்து சேதப்படுத்தியிருந்ததால், அவை துண்டு துண்டாகக் கிழிந்த நிலையில் இருந்தன.
வங்கி அதிகாரிகள் மறுப்பு – குடும்பத்தினர் வேதனை: விவசாயி குடும்பத்தினர் அவற்றைச் சேகரித்து அருகிலுள்ள பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கிளைக்குச் சென்றனர். ஆனால், நோட்டுகள் மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்ததால் வங்கி அதிகாரிகள் அவற்றை ஏற்க மறுத்தனர். மாவட்ட தலைநகரில் உள்ள எஸ்பிஐ பிரதான கிளைக்கும் குடும்பத்தினர் சென்றனர். அங்கும் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால், அந்த பணம் கிடைத்தும் அதை பயன்படுத்த முடியாமல் விவசாயி குடும்பத்தினர் வேதனை அடைந்துள்ளனர்.
