தமிழக அரசியலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) தனது செல்வாக்கை இழந்து வருவதாகவும், அதன் வாக்கு வங்கி கணிசமான அளவு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) நகர்ந்துவிட்டதாகவும் மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் அடிப்படை அடையாளமே திமுக எதிர்ப்புதான் என்று குறிப்பிட்ட மூத்த பத்திரிகையாளர் மணி, “தற்போதைய தலைமை அந்தக் கொள்கையைச் சமரசம் செய்துகொண்டதால் கட்சி தனது பயன்பாட்டு மதிப்பை இழந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, திமுகவுடன் இணக்கமாகச் செயல்பட முயற்சிப்பதாக வரும் தகவல்கள் தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைப்பாடு, திமுகவுக்கு மாற்றாகச் சிந்திக்கும் வாக்காளர்களை விஜய் பக்கம் ஈர்த்துள்ளது,” என்று குற்றம் சாட்டினார்.
தவெக-வின் எழுச்சியும் இரு திராவிடக் கட்சிகளும்!
விஜய்யின் வெற்றி தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்திற்கான அறிகுறி என்று வர்ணித்த மணி, அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் காலாவதியாகிவிட்டதாகக் கருதும் புதிய தலைமுறை வாக்காளர்கள், மாற்றத்தை நோக்கியே நகர்வதாகத் தெரிவித்தார். அதிமுக ஒன்றுபட்டு இருந்திருந்தால் விஜய்யின் இந்த எழுச்சியைத் தடுத்திருக்க முடியும் என்றும், ஆனால் தற்போதைய சூழலில் அதிமுகவே ‘தவெக-வாக உருமாறி’ வருவதாகவும் அவர் விமர்சித்தார்.

விசிக மீதான கடுமையான விமர்சனம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) நிலைப்பாடு குறித்தும் பேசிய மணி, “ஆளும் அரசை ‘பாஜக அரசு’ என்று தனது கட்சியிலேயே உள்ள ஒருவர் குற்றம் சாட்டுகிறார் என்றால், அந்தக் கட்சியின் முதன்மைச் செயலாளர் அந்த அரசில் எப்படித் தொடர முடியும்? இது அரசியல் நேர்மையற்ற செயல்,” என்று கடுமையாகச் சாடினார். இத்தகைய முரண்பாடான நகர்வுகள் திருமாவளவனின் தலைமைக்கே சவால் விடுக்கும் செயலாக அமைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பச்சை குத்தும் அரசியலும் அடிமைத்தனமும்
அரசியலில் ‘நாட்டாமை குடும்பம்’ என்று பச்சை குத்திக்கொள்வது குறித்துப் பேசிய அவர், இதுபோன்ற செயல்கள் ஒருவிதமான அடிமைத்தனத்தின் வெளிப்பாடே தவிர, முற்போக்கான அரசியல் அல்ல என்று விமர்சித்தார். எந்தவொரு தலைவரும் தொண்டர்களைத் துன்புறுத்தக் கூடாது என்றும், இதுபோன்ற செயல்கள் இன்றைய தலைமுறைக்குச் சிறிதும் ஏற்புடையதல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாற்றத்தின் தொடக்கம்
பீகாரில் பிரசாந்த் கிஷோரின் அரசியல் வெற்றி மற்றும் தமிழகத்தில் விஜய்யின் வெற்றி ஆகியவற்றை ஒப்பிட்ட மணி, இவை இரண்டும் இந்திய அரசியலில் நிலவும் மக்கள் மாற்றத்தின் குறியீடு என்று கூறினார். திமுக, அதிமுக என்ற பிம்பங்கள் உடைந்து, புதிய தலைமுறை அரசியலை நோக்கித் தமிழகம் நகர்வதை இனி யாராலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளாா்.
தொகுதி மறுவரையறை மசோதா: திமுகவின் புதிய வியூகம், சோனியா காந்தியின் சமரச முயற்சி!
